பதிவு செய்த நாள்
31
அக்
2017
10:10
உத்தமசோழபுரம்: சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், உலக நன்மைக்காக கட்டளைதாரர் ஒருவரால் கோவில் முழுவதும், 1,008 தீபங்களின் அலங்காரத்தில் ஜொலித்தது. ஆண்டுதோறும், ஐப்பசி மாதத்தில் ஒரு நாள், கட்டளைதாரர் ஒருவர், உலக நன்மைக்காக கோவில் வளாகம் முழுவதும், 1,008 தீபங்களால் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கி வருகிறார். இந்தாண்டு, தீப அலங்கார காட்சி நேற்று நடந்தது. நேற்று காலை முதல் மூலவர் பெரியநாயகி, கரபுரநாதர் மற்றும் பரிவார தெய்வங்கள் என, அனைத்து சிலைகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில், கஞ்சமலையில் ஜீவசமாதி அடைந்த, கரடி சித்தருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், 1,008 அகல் விளக்குகளுடன் கோவிலுக்கு வந்திருந்த, ஏராளமான பெண்கள், வளாகம் முழுவதும் உள்ள தூண்களில் ஏற்றி, வழிபாடு நடத்தினர். இதனால், கோவில் முழுவதும் அகல் விளக்குகளால் ஜொலித்தது. கார்த்திகை தீப திருவிழாவின், முன்னோட்டமாக இது அமைத்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.