சபரிமலையில் அரவணை தயாரிப்பு நாளை தொடக்கம் : தபாலிலும் பிரசாதம் பெறலாம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2017 10:10
சபரிமலை: சபரிமலையில் மண்டல பூஜை சீசனுக்காக அரவணை தயாரிப்பு பணி நாளை தொடங்குகிறது. சீசன் தொடங்குவதற்குள் 30 லட்சம் டின் அரவணை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சபரிமலையில் மண்டல - மகர விளக்கு சீசன் வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. சீசனுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சபரிமலை செல்லும் ரோடுகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. பம்பையில் பக்தர்கள் தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகளும், குளிப்பதற்கான வசதி களும் செய்யப்பட்டு வருகிறது. பம்பை முதல் சன்னிதானம் வரை செல்லும் நடை பாதையில் மழையால் ஏற்பட்ட சேதங்கள் சீரமைக்கப்படுகிறது.
சீசனுக்கு தேவையான அவரணை தயாரிக்கும் பணி நாளை (நவ.1) தொடங்குகிறது. 15ம் தேதிக்குள் 30 லட்சம் டின் அரவணை இருப்பில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவரணை பேக்கிங் செய்ய இந்த ஆண்டு மேலும் ஒரு இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதனால் சீசன் தொடங்கிய பின்னர் ஒரு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டாலும் மாற்று இயந்திரம் மூலம் பேக்கிங் செய்ய முடியும். நவ.,10-ம் தேதியில் இருந்து அப்பம் தயாரிக்கப்படும். 5 லட்சம் பாக்கெட் அப்பம் இருப்பில் வைக்கப்படும். சன்னிதானம் நடைப்பந்தல் அருகே புதிய நவீன மருத்துவமனை கட்டுமானப்பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அதுவும் விரைவில் திறக்கப்படும் என்று தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தபால் மூலம் பிரசாதம் அனுப்பும் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது. இந்த திட்டத்தின் படி சன்னிதானம் தபால் அலுவலகத்துக்கு மணியார்டர் அனுப்பினால் வீட்டுக்கு அப்பம், அரவணை, திருநீறு, குங்குமம் பிரசாதம் வந்து சேரும்.