பதிவு செய்த நாள்
31
அக்
2017
12:10
பொள்ளாச்சி: ராமாயணத்தில் சகோதரத்துவம், அன்பு, நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் ராமன். அவருக்கு துணையாக சீதாவும், தம்பி லட்சுமணனும் வனவாசம் புகுந்தனர். இதிகாசத்தில் கடவுள் அவதாரமான அவர்களை, மனதில் குடிகொண்டு அருள்பாலிக்கின்றனர். பொள்ளாச்சி, நெகமம் அடுத்துள்ள, சின்னேரிபாளையம் - சின்னநெகமம் இடையே, நுாற்றாண்டு கண்ட விழுதில்லா ஆலமரத்தடியில் பட்டாபிராமன் கோவில் உள்ளது. உடனிருந்து லட்சுமணனும், சீதாதேவியும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
பட்டாபிராமனின் அருள் பெற்றவர்கள், அங்கு கோவில் கட்டி, வாரந்தோறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குகின்றனர். கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் பட்டாபிராமனுக்கு, ஆலமரம் நிழல் கொடுத்து வருகிறது. இந்த ஆலமரத்துக்கு விழுதுகளே இல்லை என்பது தான் ஆச்சரியம். இதுவே, கோவிலின் தல விருட்சமாக உள்ளது. அருகிலே வேப்பமரமும் வளர்ந்துள்ளது. பட்டாபிராமனை வழிபட வரும் பக்தர்களை மட்டுமல்ல, வாகனங்களையும் தன் இடப்புறமாக வலம் வர வைக்கிறது இந்த ஆலமரம். ஒவ்வொரு சனிக்கிழமையன்றும், பட்டாபிராமனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. புரட்டாசி மாதம் ராமனுக்கு உகந்த நாள் என்பதால், பக்தர்களின் மனமுவந்து, சிறப்பு பூஜை செய்கின்றனர். தீர்வு காண முடியாத பிரச்னைகள், குடும்ப சிக்கல், நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கவும் பட்டாபிராமனையும் வழிபடுகின்றனர். நிலம் வாங்குதல், விற்பனை செய்தல், சொத்து பிரச்னைகளுக்கு ராமனை வணங்கினால் தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். ஒரே கற்சிலையில், ராமன், லட்சுமணன், சீதாதேவி ஆகியோர் வடிவமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.