பதிவு செய்த நாள்
10
டிச
2011
11:12
சிவகங்கை : திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, ரூ.56 லட்சத்தில் ஓய்வு அறை,சுகாதார வளாகம் கட்ட அரசு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகேயுள்ள திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது. ராமானுஜர் பாடல் பெற்ற திருத்தலம். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் வைகாசி தெப்பத்திருவிழாவை காண தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.
ரூ.56 லட்சம்: பக்தர்களின் வசதிக்காக, சுற்றுலா வளர்ச்சி நிதியில் ஓய்வு அறை மற்றும் சுகாதார வளாகம் கட்டித்தர வேண்டும் என, அமைச்சர் கோகுல இந்திராவிடம், சிவகங்கை தேவஸ்தானம் சார்பில் மேலாளர் இளங்கோ கோரிக்கை வைத்தார். தேவஸ்தானத்தின் கோரிக்கையை ஏற்ற அரசு, சுற்றுலா வளர்ச்சி நிதியில், திருக்கோஷ்டியூரில் ரூ.56 லட்சம் செலவில் நவீன வசதியுடன் கூடிய பக்தர்கள் ஓய்வு அறை, சுகாதார வளாகம் கட்டித்தரப்படும் என முதல்வர் ஜெ., அறிவித்துள்ளார். வரவேற்பு:முதல்வரின் இந்த அறிவிப்பை திருக்கோஷ்டியூர் வரும் வைணவர்கள், பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.