பதிவு செய்த நாள்
10
டிச
2011
11:12
அம்பலப்புழா : கிருஷ்ணன் கோவில் பால் பாயாசத்தின் விலை லிட்டருக்கு, 60 ரூபாயிலிருந்து கிடு கிடு வென, 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கேரள மாநிலம், ஆலப்புழா அருகே அம்பலப்புழா பகுதியில் கிருஷ்ணசாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் முக்கிய பிரசாதமாக, பால் பாயாசம் இருந்து வருகிறது. மிகவும் பிரசித்திப் பெற்ற இப்பிரசாதத்தை பெற, அதிகாலை 6 மணி முதலே பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்வது வழக்கம். இதற்காக, தினமும், 150 லிட்டர் பால் பாயாசம் தயாரிக்கப்படுகிறது. பக்தர்கள் கொண்டு வரும் பாத்திரங்களில் பாயாசத்தை பெற்று செல்வர். இப்பிரசாதத்தின் விலை, இதுவரை லிட்டருக்கு, 60 ரூபாயாக இருந்தது. தற்போது, இப்பாயாசம் டின்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. இதற்காக இதன் விலையை, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு திடீரென லிட்டருக்கு, 100 ரூபாயாக அதிகரித்து விட்டது. அதிக விலை உயர்வை கண்டித்து, கேரள கோவில் ஆசார அனுஷ்டான சம்ரக்ஷண சமிதி, செயலர் ஆர்.சங்கரன் நாயர் கேரள ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார். ஒரே நாளில் லிட்டருக்கு, 40 ரூபாயாக உயர்த்தியது, பக்தர்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் வரவழைத்துள்ளது.