பதிவு செய்த நாள்
02
நவ
2017
01:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, போலீசார் மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து, கூட்டாக ஆலோசனை நடத்தினர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 23ல், கார்த்திகை தீப திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. பத்து நாட்கள் நடக்கும் விழாவில், டிச., 2 அதிகாலை, 4:00 மணிக்கு, பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளன. விழாவை காண, பல்வேறு பகுதிகளிலிருந்து, 20 லட்சம் பக்தர்கள் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக, 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில், கோவில் உள் வளாகம், மாட வீதி, கிரிவலப்பாதை மற்றும் மலை ஏறும் வழியில், எத்தனை போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது, கோவில் நிர்வாகம் மற்றும் போலீஸ் சார்பில் பொருத்தப்படும் ’சிசிடிவி’ கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைத்து கண்காணிப்பது, குட்டி விமானம் மூலம் கண்காணித்தல், இந்த பணியில் ஈடுபடும் போலீசார் தங்க இட வசதி செய்து தருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து, நேற்று கோவில் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன், எஸ்.பி., பொன்னி, டி.எஸ்.பி., ரவளிப்பிரியா உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.