பதிவு செய்த நாள்
02
நவ
2017
01:11
கோவை: காரமடை அடுத்த பெள்ளாதியில் விஜயநகரப் பேரரசு காலத்தில் நிறுவப்பட்ட பிருந்தாவனம் அமைப்பு, கல்வெட்டுகள் உள்ளிட்டவற்றை அரசு பாதுகாப்பதுடன், வரலாற்று தகவல்களை வெளிப்படுத்த அகழ்வாராய்ச்சியில் இறங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. காரமடை அடுத்த பெள்ளாதியில் தமிழக மரபுசார் ஆர்வலர்கள் சமீபத்தில் ஆய்வு செய்தனர். அங்குள்ள, கோட்டை மாரியம்மன் கோவில், சிவன் கோவில், பிருந்தாவனம் அமைப்பு உள்ளிட்டவற்றை பார்வையிட்ட அவர்கள், வரலாற்றை எடுத்துரைக்கும் நுட்பம் வாய்ந்த கட்டமைப்புகளை அரசு பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழக மரபுசார் ஆர்வலர்கள் சங்க செயலாளர் விஜயகுமார் கூறியதாவது: காரமடை அருகேயுள்ள பெள்ளாதி எனும் ஊரின் உண்மையான பெயர் வெள்ளாதி. பேச்சுவழக்கில் மருவி பெள்ளாதி ஆகிவிட்டது. அப்பகுதியில், விஜயநகரப் பேரரசு காலத்தில் 15ம் நுாற்றாண்டில் குடிபுகுந்த கன்னட மக்கள் அதிகப்படியாக உள்ளனர். அங்குள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் உடைந்த நிலையில் புலிக்குட்டி கல் ஒன்று உள்ளது. அதன்முன் மண்டபம் இருந்ததற்கான அடையாளமாக, துாண்கள் வரிசையாக நட்டுவைக்கப்பட்டுள்ளன. அங்கு கோட்டை இருந்ததாகவும், திப்பு சுல்தான் காலத்தில் படையெடுப்பில் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, கோவில் புதுப்பிக்கப்பட்டு பெரிய அளவில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அதன் அருகே, 1538ல் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவிலும் உள்ளது. அங்குள்ள கல்வெட்டில், மல்லன் எனும் பிராமணன் கோவிலில் திருநந்தா விளக்கு எரிக்க, 40 பணம் தந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கோவிலில் இருந்து, 500 மீட்டர் தொலைவில் பிருந்தாவனம் அமைப்பு உள்ளது. அதில், வைணவப் பெரியவர் ஒருவருக்கு முழுவதும் கற்களால் சமாதி எழுப்பியுள்ளனர். ஆற்றின் எதிர்புறம் உள்ள பாறையில் ஐந்து தலை நாகமும், அது படம் எடுக்கும் பகுதியில் லிங்கமும் இருக்கிறது. எனவே, சைவர்களுக்கான அமைப்பும் அங்கு உள்ளது. கிருஷ்ணதேவராயர் காலத்திலே வைணவர், சைவர் சண்டை உச்சகட்டத்தில் இருந்துள்ளது. இவை எல்லாம் ஆராயப்பட வேண்டி ஒன்று. இவற்றை அரசு பாதுகாப்பதுடன், பொது மக்களும் பராமரிக்க வேண்டும். தொல்லியல் துறையினர் இங்கு அகழ்வாராய்ச்சியில் இறங்கினால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.