பதிவு செய்த நாள்
12
நவ
2010
04:11
காளிதேவியை பணிந்து வணங்கினார் ராம்குமார். அவள் ராம்குமாரின் நாவில் ஏதோ எழுதினாள். இதன்பிறகு ராம்குமாரின் ஒவ்வொரு வார்த்தையும் பலிக்க ஆரம்பித்தது. தனக்கு முதல் குழந்தை பிறந்தவுடன், தன் மனைவி இறந்து விடுவாள் என ராம்குமார் சொல்லியிருந்தார். அதுபோலவே நடக்கவும் செய்தது. மூத்தமகன் குடும்பப் பொறுப்பைச் சுமந்ததால், சுதிராமுக்கு ஆன்மிக வழிபாடுகளில் ஈடுபட அதிக நேரம் கிடைத்தது. எப்படியேனும் ஒருமுறை ராமேஸ்வரம் சென்று வர முடிவு செய்தார். கமார்புகூருக்கும், ராமேஸ்வரத்துக்கும் 2,400 கி.மீ., தூரம். அந்தக்காலத்தில் இந்த தூரத்தைக் சுதிராம் நடந்தே கடந்தார். வழியிலுள்ள எல்லா தலங்களையும் தரிசிக்கவும் செய்தார். 1824ல் இந்தப் பயணம் நிகழ்ந்தது. ராமேஸ்வரம் தரிசனம் முடிய அவருக்கு ஒரு ஆண்டு ஆகிவிட்டது. ஊர் திரும்பியதும், சந்திராதேவி கர்ப்பமானார். 1826ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ராமேஸ்வரம் ராமநாதரின் பெயரையே குழந்தைக்கு சூட்டினார். ராமேஸ்வர் என்பது இரண்டாவது மகனின் பெயர்.இதன்பிறகு பதினொரு ஆண்டுகள் சுதிராமின் வாழ்வில் எந்தப்புயலும் இல்லை. அமைதியாக அவரது வாழ்க்கை கழிந்தது. நிறைந்த செல்வமும் கிடைத்தது. ஆயினும், அவர் தனது நண்பர் கோஸ்வாமி கொடுத்த குடிசை வீட்டில் தான் வசித்தார். வயதும் அதிகமாகி விட்டது. கயாவுக்கு தீர்த்த யாத்திரைக்கு செல்ல விரும்பினார் சுதிராம். கயாவில், முன்னோர்களை எண்ணி பிண்டம் கரைத்தால், அவர்கள் பேரின்பம் பெறுவர் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில், தன் முன்னோர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கயாவுக்கு புறப்பட்டார் சுதிராம். கமார்புகூருக்கும், கயாவுக்கும் 320 கி.மீ., தூரம். இந்த தூரத்தையும் நடந்தே கடந்தார் சுதிராம். 1835 ஜனவரியில் புறப்பட்ட அவர், மார்ச்சில் அங்கு போய் சேர்ந்தார். மூன்று மாதம் நடந்தாலும் களைப்பேதும் தெரியவில்லை.
ராமேஸ்வரத்துக்கே நடந்தவருக்கு இது பெரிய காரியமில்லை என்றாலும், முதுமையிலும் மனம் தளரவில்லை என்பதை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். குறிப்பாக முதியவர்கள் தாங்கள் தளர்ந்து விட்டது போன்ற உணர்வுக்கு ஆளாகக்கூடாது. சுதிராமின் வாழ்க்கையை தங்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். கயாவில் கதாதரர் என்ற பெருமாள் கோயில் இருந்தது. விஷ்ணுவை வழிபட்டு கோயிலிலேயே தங்கியிருந்தார் சுதிராம். பிண்டம் கரைத்தார். விஷ்ணுவின் பாதங்களில் பிண்டங்கள் இட்டு வழிபட்டார். ஒருநாள் மாலையில், விஷ்ணுவை வழிபட்டு, இரவில் கோயிலிலேயே படுத்து அயர்ந்துறங்கி விட்டார். நள்ளிரவு வேளையில் ஒரு கனவு.அந்தக் கோயிலினுள் இருந்து ஒளிவெள்ளம் பாய்நது எங்கும் பரவியது. ஒரு குரல் கேட்டது.ஹே சுதிராம்! நான் சொல்வதைக் கேள். உலக நன்மைக்காகவும், அநியாயங்களை ஒடுக்கவும் நான் பூவுலகில் அவதரிக்கப் போகிறேன். அதுவும் உன் மகனாகப் பிறக்கப் போகிறேன். நீ வசிக்கும் குடிசை எனக்கு போதுமானது, குரல் அடங்கி விட்டது. விஷ்ணுவின் பாதங்களில் சுதிராம் இட்ட பிண்டங்களை அந்த ஒளி ஏற்றுக் கொள்வது போல் தெரிந்தது. ஒரு ஆசனத்தில் ஏதோ ஒரு தெய்வம் அமர்ந்திருப்பது போல் தோன்றியது.சுதிராம் மகிழ்ச்சிக்கடலில் மிதப்பது போன்ற ஒரு காட்சி. அதே நேம் முக வாட்டத்துடன், வேண்டாம் பிரபு. தாங்கள் என் குடிசையில் அவதரிப்பதா? என்னிடம் என்ன இருக்கிறது, உங்களை வளர்க்க. போயும் போயும் ஒரு பரதேசியின் வீட்டிலா பிறக்க வேண்டும். உங்களுக்கு சேவை செய்யும் போது, ஏதேனும் குறை நிகழ்ந்தால் என்னால் தாங்க முடியாது, என்றார். அந்த தெய்வ ஒளி, அவரைத் தேற்றியது.சுதிராம்! கவலை கொள்ளாதே. அனைத்தும் நல்லதாகவே நடக்கும்,.கனவு கலைந்து விட்டது. சுதிராம் திடுக்கிட்டு எழுந்தார்.
அந்த பரமாத்மாவே என் வீட்டில் அவதரிக்கப் போகிறாரா? இறைவா! உன் கருணையை என்னென்பேன்,. அவர் மகிழ்ச்சியுடன் உறங்கிப் போனார்.இதே நேரத்தில், கமார்புகூரிலும் சில அதிசயங்கள் நிகழ்ந்தன. சந்திராதேவி வீட்டில் தனித்து படுத்திருந்த போது, வீட்டினுள் ஜல்...ஜல்...ஜல்...என சலங்கை ஒலி கேட்டது. அருகில் சுதிராம் அமர்ந்திருப்பது போன்ற ஒரு உணர்வு. ஆனால், அவர் ஒளிப்பிழம்பாகக் காணப்பட்டார். திடுக்கிட்ட சந்திராதேவி விளக்கை ஏற்றி சுற்றுமுற்றும் பார்த்தார். எதுவுமே இல்லை.விடியவிடிய இதே நினைவில் இருந்த அவர் மறுநாள் தன் தோழிகள் பிரசன்னமயி, தனி ஆகியோரிடம் இதைச்சொன்னார். அவர்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்னும் சின்னக்குழந்தையாக இருக்கிறாயே! ஏதேனும் கனவு கண்டிருப்பாய். கவலை கொள்ளாதே. இதற்கு போய் பயப்படலாமா? என சிரித்துக் கொண்டே கூறினர். மறுநாள் அவர், தன் தோழி தனியுடன் சிவாலயத்திற்கு சென்றார். அப்போது பேரொளி ஒன்று புறப்பட்டு வந்தது. சிவாலய வாசலில் நின்ற சந்திராதேவியை நோக்கி அந்த ஒளி வெள்ளம் பாய்ந்தது. சந்திராதேவி வியப்போடு அந்த ஒளியை நோக்கினார். அந்த ஒளிக்கற்றைகள் சிவலிங்கத்தில் இருந்து கிளம்பி பாய்ந்து கொண்டிருந்தது.ஐயோ தனி! இங்கே பார். இது என்ன ஒளி, என்னை நோக்கி வருகிறதே, என அவர் சொல்ல, தனி அதைப் பார்க்க முயல்வதற்குள் அந்த ஒளி சந்திராதேவியாரின் வயிற்றில் ஐக்கியமாகி விட்டது. அவர் மூர்ச்சையாகி விட்டார். தனி பதறிப் போனார். தண்ணீர் தெளித்து தோழியை எழுப்பினார். மலங்க மலங்க விழித்த தோழிக்கு விசிறியால் வீசி, ஆசுவாசப்படுத்தினார். சந்திரா! உன்னிடம் ஏனிந்த மாற்றம். எதைக் கண்டு இப்படி பயப்படுகிறாய். நீ தைரியமாய் இருக்க வேண்டும். நாங்கள் இருக்கிறோம், என ஆறுதல் சொன்னார். சந்திராதேவியார் தான் கண்ட காட்சியை தோழியிடம் சொன்னார்.அட பைத்தியக்காரி! மீண்டும் இதே கதையைச் சொல்கிறாயா? நீ சொல்வது போல ஒளியோ எதுவுமோ தோன்றியிருக்காது. ஏதோ மவ பிரமையில் இவ்வாறு சொல்கிறாய், என்று தேறுதல் சொன்னார். ஆனால், வீடு திரும்பிய சந்திராதேவியின் உடலில் மாற்றங்கள் தெரிந்தன. வயிற்றில் ஏதோ மாறுதல்.நான் கர்ப்பம் தரித்திருக்கிறேனா? சந்திராதேவி ஆச்சரியத்தில் மூழ்கினார்.