பதிவு செய்த நாள்
12
நவ
2010
04:11
கயா சென்றிருந்த சுதிராம் வீடு திரும்பினார். மனைவி கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்டார். ஊரே பச்சை பசேலென இருந்தது. சந்திராதேவியின் குணத்திலும் அற்புதமான மாறுதல்கள் தென்பட்டன. தன்னை நாடிவந்த ஏழைகளுக்கு அவர் உதவி செய்தார். உணவளித்தார். சிலரது வீடுகளுக்கு சென்று அரிசி, பருப்பு ஆகியவற்றை தானம் செய்தார். சுதிராம் தன் மனைவியிடம் கயாவில் உள்ளகோயிலில் தான் கண்ட கனவு பற்றி கூறினார். சந்திராதேவியும், தாம் கண்ட கனவு பற்றி கூறி ஆச்சரியப்பட்டார். தங்கள் குடும்பத்தில் ஒரு தெய்வ குழந்தை பிறக்கப் போவது உறுதி என்பது அவர்களுக்கு புரிந்துவிட்டது. சந்திராதேவி தங்கள் குலதெய்வமான ராமபிரானை தினமும் வழிபட்டு குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று வேண்டுவார். சில நாட்களில் அவ்வூரில் கடும் குளிர் மறைந்து வசந்தம் பிறந்தது. மக்கள் மென்மையாக பேசத் துவங்கினர். கெட்டவர்கள் கூட நல்லவர்களாயினர். மக்கள் தங்கள் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபட்டனர். கமார்புகூர் ஊர்மக்கள், தங்களிடமும், இயற்கையிலும் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள் கண்டு ஆச்சரியமடைந்தனர். அந்த இனிமையான காலகட்டத்தில் அவதரித்தார் பகவான் ராமகிருஷ்ணர். 1836 பிப்ரவரி 17 புதன்கிழமை சூரிய உதிப்பதற்கு சற்று முன்பு சந்திராதேவி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். உலகில் மிகப் பெரிய மகான்கள் அவதரிக்கும்போது, ஏழைகள் வீட்டில்தான் பிறப்பார்கள் போலும்! கமார்புகூரில் சுதிராம் வசித்த வீட்டில் நெல் அவிக்கும் அடுப்பும், நெல்குத்தும் உரலும் தவிர வேறு எதுவுமே இல்லை. மேலே கூரை வேயப்பட்டிருந்தது.
உலக மக்களுக்கு எளிமையைப் போதிக்க வந்த அந்த மகான், இதுபோன்ற எளிய வீட்டில் பிறந்ததில் ஆச்சரியம் ஏதுமல்ல. குழந்தை பிறந்தவுடன், சந்திராதேவிக்கு பிரசவம் பார்த்த பெண்மணி திடுக்கிட்டு போனாள். தாயருகில் கிடத்தப்பட்டிருந்த குழந்தையை திடீரென காணவில்லை. அவள் எங்கெல்லாமோ தேடிப்பார்த்தாள். தாய் விழித்தவுடன் குழந்தை எங்கே என்றால் என்ன பதில் சொல்வது? அவள் கலங்கிப் போனாள். சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தாள். என்ன ஆச்சரியம்! அந்த கூரை வீட்டின் அடுப்புக்குள் குழந்தை படுத்திருந்தது. பிறந்த குழந்தை எப்படி நகர்ந்து செல்லும். அதிலும் தாயின் அருகில் கிடத்தப்பட்டிருந்த குழந்தை அடுப்புக்குள் போய் படுத்திருக்கிறது என்றால் இக்குழந்தை ஏதேனும் சக்தி வாய்ந்நததா? இது மாயக்குழந்தையா?மருத்துவச்சிக்கு கை, கால்கள் நடுங்கின. அவள் ஓடிப்போய் குழந்தையை தூக்கி வந்தாள். குழந்தையின் உடல் முழுவதும் அடுப்புச் சாம்பல்! அக்குழந்தை பிறந்தவுடனேயே அந்த சாம்பலை சிவபெருமானின் உடலில் பூசப்படும் திருநீறாகக் கருதி, உருண்டு புரண்டு வந்தது அவளுக்கு புரியவில்லை.மேலும் குழந்தை பிறந்த நேரத்திலிருந்து அழவே இல்லை. ஆறுமாத குழந்தையின் உருவம்போல கனமாகவும் இருந்தது. சுதிராமுக்கு குழந்தை பிறந்த செய்தி அறிவிக்கப்பட்டது. அவர் ஆனந்தம் கொண்டார். சங்கு ஊதப்பட்டது. அந்த காலத்தில் ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் சங்கு ஊதி வெளியுலகிற்கு தெரிவிப்பார்கள். பிறந்த குழந்தையின் ஜாதகம் கணிக்கப்பட்டது. குழந்தை பிறந்த வேளையைக் கொண்டு அந்த குழந்தை திறமை மிக்கவனாகவும், மற்றவர்களால் போற்றப்படுபவனாகவும், மகானாகவும், எல்லாராலும் வணங்கப்படுபவனாகவும் இருப்பான் என கணிக்கப்பட்டது. ஜோதிடர் சொன்னதைக் கேட்டு சுதிராமுக்கு மிக்க மகிழ்ச்சி.
தன் குழந்தை சிறந்த அறிஞனாக வரப்போகிறான் என்பதை எண்ணி எண்ணி பூரித்தார். கயாவில் தாம் கண்ட கனவின் நினைவாக குழந்தைக்கு அவ்வூர் பெருமாளான கதாதரன் எனப்பெயர் சூட்டினார். அவர் பிறந்தநாளிலிருந்தே பல அதிசயங்கள் நிகழ்ந்தன. அவற்றை கண்டு சந்திராதேவி பயம் கொண்டார். தெய்வமே குழந்தையாக பிறந்திருப்பதால்தான் இத்தகைய அதிசயங்கள் நடக்கிறதோ என அவர் சந்தேகப்பட்டார். குழந்தைக்கு ஏதேனும் பேய் பிடித்திருக்கிறதோ என்றுகூட நினைத்தார். சில வேளைகளில் குழந்தையை தூக்கவே முடியாத அளவிற்கு கனமாக இருக்கும். சில சமயங்களில் மிக மிக இலகுவாக இருக்கும். இப்படியே மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. 1839ம் ஆண்டு மீண்டும் ஒரு பெண் குழந்தையை சந்திராதேவி பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு சர்வமங்களா எனப் பெயர் சூட்டினார். இதன் பிறகு இரண்டுஆண்டுகள் கடந்துவிட்டன. கதாதரன் 5 வயதை எட்டினான். சிறுவயதிலேயே நினைவாற்றல் அதிகமாக இருந்தது. சுதிராமன் தன் குழந்தைக்கு நல்லமுறையில் பிரார்த்தனை பாடல்களை சொல்லிக் கொடுத்தார். ஒருமுறை கேட்டாலே கதாதரன் அதை நன்றாக புரிந்து அப்படியே திரும்பச் சொல்லுவார். அவர் மந்திரங்களை திறம்பட படித்தார். விரைவிலேயே பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட்டார். மந்திரங்களை அருமையாகச் சொன்னார். சமயச் சடங்குகளில் கலந்து கொள்வார். அவரது புகழ் ஊரின் பல பகுதிகளில் பரவியது. அவர் சொன்னது சொன்னபடி நடக்கும் என்பதால் மக்கள் அவரைத் தேடி வர ஆரம்பித்தனர்.