பதிவு செய்த நாள்
04
நவ
2017
12:11
ஈரோடு: ஈரோடு சொசைட்டியில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, கூடுதலாக மஞ்சள் கொள்முதல் செய்யப்பட்டது.
ஈரோடு பகுதி மஞ்சளுக்கு, தேசிய அளவில் தனி இடம் உண்டு. மஞ்சளில், உணவு மற்றும் மருந்து பொருட்கள் தயாரிப்போர், அதிகளவில் இங்கு வந்து, வாங்கி செல்கின்றனர்.
அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களுக்கு, ஈரோடு, கருங்கல்பாளையத்தில் உள்ள, ஈரோடு கூட்டுறவு வேளாண் உற்பத்தியாளர் விற்பனை சங்கத்தில், மஞ்சள் கொள்முதல் செய்கின்றனர்.
இதுகுறித்து சங்க துணை பதிவாளர் கந்தராஜா கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, 11 டன், பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு, 4.5 டன், திருவேற்காடு மற்றும் கும்பகோணம், ஒப்பிலியப்பன் கோவிலுக்கு, தலா ஒரு டன், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, எட்டு டன் மஞ்சள் வாங்கி செல்கின்றனர். தற்போது, ஐயப்பன் கோவில் சீசன் துவங்கி உள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வது வழக்கம். இதனால், அக்கோவிலில் மேலும், மூன்று டன் மஞ்சள் கொள்முதல் செய்து, மஞ்சள் பொடி மற்றும் குங்குமம் தயாரிக்க ஆர்டர் கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.