பதிவு செய்த நாள்
12
டிச
2011
11:12
ஈரோடு: கேரளாவின் எல்லை மாவட்டங்களில், ஐயப்ப பக்தர்கள் மீதான தாக்குதலுக்கு, ஸ்ரீ ஐயப்ப சேவா சமாஜம் கண்டனம் தெரிவித்துள்ளது.அமைப்பின் இணைச் செயலாளர் ராஜன் வெளிட்ட அறிக்கை:பழம்பெரும் நடிகரும், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு ராஜகுருவாகவும் திகழ்ந்த மறைந்த எம்.என்.நம்பியார் சாமியின், மகன் சுகுமாரன் நம்பியார் தலைமையில், 2008ல் சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சேவா சமாஜம் துவங்கப்பட்டது. குறுகிய காலத்தில் நாடு முழுவதும் கிளைகளைத் துவக்கி, சேவைப் பணிகளில் ஈடுபட்டு உள்ளது.கடந்த 5ம் தேதி தர்மபுரி, தொப்பூரில் நடந்த வாகன விபத்தில் இறந்து போன ஆந்திராவைச் சேர்ந்த ஏழு ஐயப்ப பக்தர்களை அடையாளம் காட்டும் பணியில் ஈடுபட்ட சமாஜம் பொறுப்பாளர்கள், போலீஸ் துறையின் பாராட்டுக்களை பெற்றனர்.கடந்த சில நாட்களாக முல்லைப் பெரியாறு அணையை மையமாக கொண்டு கேரளாவில் நடக்கும் அராஜக செயல்களை, ஐயப்ப சேவா சமாஜம் வன்மையாக கண்டிக்கிறது. ஜாதி, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, அனைவரும் இறைவடிவம் எனும் கோட்பாட்டின் அடிப்படையில் விரதமிருந்து, ஐயப்பனைக் காண பக்தர்கள் வருகின்றனர்.அவர்களை கேரளாவின் எல்லை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கடும் துன்பத்துக்கு ஆளாக்கினர். பக்தர்களின் வாகனங்களை வழிமறித்து திருப்பி அனுப்பியுள்ளனர். சில இடங்களில் கீழ்த்தரமான வார்த்தைகளில் திட்டியும், வாகனத்தின் மீது மையால் கண்டபடி எழுதியுள்ளனர். கேரள அரசும், போலீஸ் துறையும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது துரதிருஷ்டவசமானது. நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தும், இத்தகைய செயல்களை ஊக்குவிப்பது மிகப்பெரிய தவறு. தேசிய அளவிலான கட்சிகள் கூட கைகளில் தங்கள் கட்சிக் கொடியை ஏந்தி ஐயப்ப பக்தர்களை வசைபாடியதை கண்ணீர் மல்க பலரும் கூறினர். கேரள அரசும், மத்திய அரசும் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதம் உடனடியாக செயல்பட வேண்டும்.ஐயப்ப சேவா சமாஜம் தொண்டர்கள் எல்லைப் பகுதியில் முகாமிட்டு, ஐயப்ப பக்தர்களுக்கு உதவி வருகின்றனர். உதவி வேண்டுவோர், 94479 70315, 99476 35700, 94467 09954 ஆகிய ஃபோன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.