பதிவு செய்த நாள்
12
டிச
2011
11:12
காரைக்குடி : முல்லைப் பெரியாறு அணை பிரச்னையால் அய்யப்ப பக்தர்கள், காரைக்குடி, தென் சபரி அய்யப்பன் கோவிலில் விரதம் முடிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ளது கொசப்பட்டி. இங்கு, 18 படியுடன் கூடிய, தென் சபரி அய்யப்பன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், இங்கிருந்து புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி, சபரிமலை செல்வது வழக்கம். இந்த ஆண்டு, முல்லைப் பெரியாறு அணை பிரச்னையால், கேரள எல்லைக்குள் தமிழர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல முடியவில்லை. தற்போது, கொசப்பட்டி தென் சபரி அய்யப்பன் கோவிலுக்கு, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருமயம், காரைக்குடி, பேராவூரணியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் தினமும் வருகின்றனர். அவர்கள் இருமுடியுடன், 18 படி ஏறி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, விரதத்தை முடிக்கின்றனர்.
காரைக்குடியைச் சேர்ந்த பக்தர் ராமன் கூறியதாவது: கடந்த 12 ஆண்டுகளாக, சபரிமலைக்குச் செல்கிறேன். முல்லைப் பெரியாறு அணை பிரச்னையால், தமிழக அய்யப்ப பக்தர்கள் தாக்கப்படுகின்றனர். இதனால், சபரிமலை செல்வதைத் தவிர்த்து, பாத யாத்திரையாக, கொசப்பட்டியில் விரதத்தை முடித்தோம்.
புதுக்கோட்டை முத்துக்குமார் கூறுகையில், அய்யப்பனுக்கு மூன்றாண்டு மாலை அணிந்து செல்கிறேன். கேரளாவில், தமிழர்கள் தாக்கப்படுவதால், பாதுகாப்பு கருதி, இம்முறை சபரிமலை செல்லாமல், கொசப்பட்டி தென் சபரி அய்யப்பன் கோவிலில் விரதம் முடித்தோம், என்றார்.