பதிவு செய்த நாள்
13
நவ
2017
11:11
பொள்ளாச்சி : பெரியகளந்தையின், வரலாற்றை வெளிப்படுத்தும், கல்திட்டைகளையும், கல்வெட்டுகளையும், பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர். பொள்ளாச்சி அருகேயுள்ள பெரிகளந்தை, பல நுாற்றாண்டுகளுக்கு முன், அரசர்கள் ஆண்ட பகுதியாக இருந்துள்ளது. இது பற்றிய வரலாற்று ஆவணங்கள் மறைந்தாலும், இன்றுள்ள ஆதீஸ்வரன்கோவில் கல்வெட்டுகளும், அப்பகுதியில் அரண்மனைகள் இருந்துள்ளதை உறுதிபடுத்துகின்றன.மேலும், பெரியகளந்தை சுற்றுப்பகுதியில் கோட்டை கட்டடங்களின் இடிபாடுகள், மண்ணில் புதைந்த கோவில்கள், கிடைத்த பொருள்களால், அப்பகுதி, பழங்காலத்திலேயே சிறப்பு பெற்றிருந்ததை வெளிப்படுத்துகிறது.
கிராமத்திலுள்ள, ஆதீஸ்வரன் கோவிலுக்கு மேற்கு பகுதியில், தொல்லியல் சின்னமான கல்திட்டை ஒன்று, புதருக்குள் காணப்படுகிறது. குடிசை போன்ற அமைப்பில் மூன்று பக்கமும் பட்டையான பலகை கற்களால் மூடப்பட்டுள்ளது. முன்பக்க வாயில் பகுதி மட்டும் பாதி திறந்த தோற்றத்திலும் கட்டப்பட் டுள்ளது. இக்கல்திட்டை ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என, தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கல்திட்டையின் உட்பகுதியில், புலியை கொன்ற வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் சிற்பங்களை பிற்காலத்தில் அமைத்துள்ளனர். ஒரு சிற்பத்தில் வீரன் குதிரையுடன் இருப்பது போன்றும், மற்றொரு சிற்பத்தில் பாய்ந்து தாக்குகின்ற புலியின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், புலியோடு வீரன் போரிடும் வழக்கமான சிற்பமாக இல்லாமல், வீரனும், புலியும் தனித்தனியே காட்டப்பட்டுள்ளன.பழங்கால கல்திட்டை என்றாலும், இங்குள்ள சிற்பங்களை பல்வேறு பெயரிட்டு, சிற்பங்களுக்கு எண்ணெய் பூசி, குங்குமம் இட்டு இப்பகுதி மக்கள் வணங்குகின்றனர். இத்தகைய வரலாற்று சின்னங்கள் குறித்த விரிவான ஆய்வையும், பாதுகாப்புக்கான பணிகளையும் அரசு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.