பதிவு செய்த நாள்
14
நவ
2017
11:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில், சுவாமிக்கு அதிகமாக அபிஷேகம் செய்யப்பட்டதால், அஷ்ட பந்தன மருந்து சேதமானது, என, தலைமை ஸ்தபதி முத்தையா கூறினார். திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில், கடந்த பிப்., 6ல், கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், அருணாசலேசுவரர் சுவாமி பிரம்மபாகத்தில் சாற்றப்பட்ட அஷ்டபந்தன மருந்து, ஓரிரு மாதங்களிலேயே சேதமானது. இதுகுறித்து, அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி முத்தையா ஆய்வு செய்தார். நேற்று, சுவாமிக்கு சேதமான அஷ்டபந்தன மருந்தை சரி செய்யும் பணி நடந்தது. பக்தர்கள் செலுத்திய நகைகளை சரிபார்த்து, மீண்டும் அஷ்ட பந்தன மருந்து சாற்றப்பட்டது.இதுகுறித்து, தலைமை ஸ்தபதி முத்தையா கூறியதாவது: அருணாச லேசுவரர் சுவாமியின் பிரம்ம பாகத்தில் சாற்றப்பட்ட அஷ்ட பந்தன மருந்து, முன்பக்கத்தில், ஐந்தாறு இடங்களில் விரிசல் ஏற்பட்டிருந்தது. அது தற்போது சரி செய்யப்பட்டுவிட்டது. அதிகளவில் சுவாமிக்கு அபிேஷகம் செய்ததால் தான் விரிசல் ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.