பதிவு செய்த நாள்
14
நவ
2017
11:11
புதுடில்லி: காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலில் தினமும், 50 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கும்படி, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயகக் கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஜம்முவில், கத்ராவில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற, வைஷ்ணவ தேவி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர். கடந்த ஆண்டு, இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கான வசதிகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி, வைஷ்ணவ தேவி கோவில் தேவஸ்தான வாரியத்துக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது.
இதையடுத்து, தேவஸ்தான வாரியம் அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: சில ஆண்டுகளாக, கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோடை காலமான, ஏப்., மே மாதங்களில், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஜூலை முதல் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். கடந்த ஆண்டு மட்டும், 77 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசித்துள்ளனர். ஜம்முவில் இருந்து கத்ராவுக்கு, மூன்று சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், பயண நேரம் வெகுவாக குறையும். அர்த்தகுவாரியில் இருந்து கத்ரா வரை, புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. கத்ரா - தேவஸ்தான தங்குமிடம் வரை, பக்தர்கள் சென்று வருவதற்கும், பூஜை பொருட்களை எடுத்து செல்வதற்கும், ரோப்வேக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, வைஷ்ணவ தேவியை தரிசிப்பதற்கு தினமும், 50 ஆயிரம் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தால், அர்த்தகுவாரி மற்றும் கத்ரா பகுதியில் தடுத்து நிறுத்த வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதுடன், பாதயாத்திரை பக்தர்கள் கோவில் வரை செல்வதற்கான புதிய சாலையை, 24ம் தேதி திறப்பதற்கும், எலக்ட்ரிக் கார்களை இயக்குவதற்கும், அனுமதி அளித்துள்ளது.