பதிவு செய்த நாள்
14
நவ
2017
12:11
சபரிமலை வரும், தமிழக பக்தர்களின் வசதிக்காக, கேரள அரசு, சபரிமலையில், ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என, அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தினார். சபரிமலை வரும் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக, தென் மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம், நேற்று, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடந்தது.
அதில், தமிழக முதல்வர் சார்பில், மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் பேசியதாவது: ஜெ., செயல்படுத்திய திட்டங்களால், தமிழக கோவில்கள் சிறப்பாக உள்ளன. தமிழக இந்து சமய அறநிலையத் துறை தலைமையிட, தகவல் மையத்தில், இலவச டெலிபோன் இணைப்பு உள்ளது. அதை தொடர்பு கொண்டு, பக்தர்கள், விபரம் அறிந்து கொள்கின்றனர். ஏற்கனவே, சபரிமலை உட்பட மூன்று இடங்களில் இயங்கி வரும் தகவல் மையங்களுடன், இவ்வாண்டு கூடுதலாக, தேனியில், ஒரு தகவல் மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. சபரிமலையில், கேரளாவில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஏற்று, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், தமிழக பக்தர்கள் நடந்து கொள்கின்றனர். அதேபோல், இந்தாண்டும் செயல்படுவர். சபரிமலைக்கு வரும் பக்தர்களில், 40 சதவீதம் பேர், தமிழகத்திலிருந்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர, தமிழக அரசால் பரிந்துரைக்கப்படும் ஒருவரை, திருவிதாங்கூர் தேசவம் போர்டில், உறுப்பினராக சேர்க்க வேண்டும்.
தமிழக பக்தர்களுக்கு தேவையான, அனைத்து அடிப்படை வசதிகளையும், அமைத்து தர வேண்டும். 2012ல், தமிழக பக்தர்களின் வசதி மேம்பாட்டிற்காக, ஐந்து ஏக்கர் நிலத்தை, சபரிமலையில் ஒதுக்கீடு செய்து தருவதாக, கேரள அரசு உறுதி அளித்திருந்தது. அதற்கேற்ப, தமிழகத்திலும், கேரள பக்தர்களின் வசதிக்காக, பழநியில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்க, தமிழக அரசு முன்வந்தது. கேரள அரசு, சபரிமலையில் ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்தால், அய்யப்பன் பக்தர்களுக்கு, கூடுதல் வசதிகள், தமிழக அரசால் செய்யப்படும். எனவே, இவ்விஷயத்தில் கேரள அரசு, விரைவாக முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். - நமது நிருபர் -