பதிவு செய்த நாள்
20
நவ
2017
12:11
ஓசூர்: சூளகிரி அடுத்த அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவிலில், 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற, விளக்கு பூஜை நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த அத்திமுகம் கிராமத்தில், பழமையான காமாட்சி சமேத ஐராவதேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டதால், ஊர் பொதுமக்கள் சார்பில், சீரமைப்பு பணி நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்திற்காக பணிகளை விரைந்து முடிக்கும் வகையில், நேற்று முன்தினம் மாலை, கோவில் வளாகத்தில் கலந்தாய்வு கூட்டம், கூட்டு வழிபாடு மற்றும் திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சிவ நடராஜன் சுவாமிகள் பங்கேற்று, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். அத்திமுகம் பகுதியை சேர்ந்த, 1,000 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, திருவிளக்கு பூஜை செய்தனர். அப்போது, விளக்கு பூஜை செய்வதன் நன்மை குறித்து பெண்களுக்கு விளக்கி கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.