Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

8. வேத சாஸ்தா 8. வேத சாஸ்தா
முதல் பக்கம் » அஷ்ட சாஸ்தா தரிசனம்
கந்த புராணத்தில் சாஸ்தா!
Share
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 டிச
2011
12:18

சாஸ்தா பற்றி கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ள தகவல்:

முன்னொரு காலம். தேவர்களைச் சிறையிலிட்டு சூரபதுமன் அரசு புரியுங்காலத்தில். இந்திரனையும் சிறையிலிட்டு. இந்திராணியை அபகரிக்க சூரபன்மன் எண்ணங்கொண்டான். அவுணர்களின் வலிமையை உணர்ந்த இந்திரன் தன் மனைவியான அயிராணியோடு இந்திரலோகம் அகன்று பூலோகம் அடைந்தான். நிலவுலகில் தென்தேசத்திலுள்ள சீர்காழிப் பதியை அடைந்து, இத்தலமேயாம் இருத்தற்கு நன்று என்று எண்ணி அங்கேயே ஓர் திருநந்தவனம் அமைத்து, அன்றலர்ந்த மலர்களால் சிவபெருமான் திருவடிகளைப் பூசித்துக்கொண்டு, மனைவியுடன் வாழ்ந்து வந்தான். சூரப்பன்மனின் ஒற்றர்கள் தன்னைத் தேடி வருவதை அறிந்த இந்திரன் தன் மனைவியோடு அங்கே மூங்கில் வடிவாய் மறைந்திருந்து தவம் செய்தான். (சீர்காழிக்கு வேணுபுரம் என்று ஓர் பெயரும் உண்டு. வேணுபுரம்-மூங்கில்காடு) இந்திரனைக் காண இயலாததால் சினங்கொண்ட சூரபன்மன் பூவுலகில் மழை பெய்யாது தடுத்தான். திருநந்தவனம் வாடியது கண்டு இந்திரன் மனம் வருந்த அசரீரி வாக்கு, இங்கு ஓர் ஆறு விரைவில் வரும். வருந்தற்க என்று ஒலிந்தது. அதுவே பின்னர் அகத்தியர் கமண்டலத்திலிருந்து கிளம்பிய காவிரி நதியாகும்.

காவிரி சோழ நாடு செல்லுதல்

அகத்திய முனிவருடைய கமண்டலத்திலிருந்து புறப்பட்ட காவிரி நதி, நீக்குதற்கரிய பாசத்தளையை நீக்கி நன்னெறிப்படுத்தும் குருவருளால் நேரே முத்தியுலகு செல்லும் ஆருயிர் போலவும் தடை செய்ய வல்ல ஒருவன் தனது மந்திர வலிமையால் பெரிய குடத்திலிட்டு வைத்திருந்த பாம்பு அருளுடையோன் ஒருவன் அத்தடையை நீக்க அது விரைந்து செல்லும் தன்மை போலவும் பதிநூல் ஒழுக்கம் போலவும். இறைவன் ஆன்மாக்களுக்குக் காட்டியருளும் கருணை போலவும் பெருகிப் பல காத தூரம் சென்று சந்தனமரம் முதலிய விருட்சங்களையும், யானைத்தந்தம், முத்து, பொன் முதலிய பொருள்களையும், அலைக்கரங்களால் வாரிக்கொண்டு கீழ்த்திசையை நோக்கி விரைந்து ஓடி இந்திரன் தவஞ்செய்யும் சீர்காழிச் சண்பகவனத்தை அடைந்தது.

இந்திரனின் சிவபூசை

இந்திரன் காவிரியைக் கண்டு கவலை நீங்கி அனந்தக்கூத்தாடினான். மலர்வனத்தினைக் கண்டு மகிழ்வுடன் வைகறைக் காலத்தில் சென்று வண்டுகள் வீழா முன்னே பழுதில்லாத மலர்களைக் கொய்து  சைவாகம விதிப்படி சிவ பெருமானைப் பூசனை செய்துகொண்டு சீகாழியில் சண்பகவனத்திலே இருந்தனன்.

தேவர்கள் இந்திரனை அடைந்து முறையிடுதல்

இந்திரன் சீர்காழியில் சிவபெருமானைப் பூசித்துக் கொண்டு இருக்கும்பொழுது, சில தேவர்கள் சூரபன்மனின் ஏவலால் மெலிந்து தளர்ந்து, இந்திரனைத் தேடிக்கொண்டுவந்து சீகாழியிலே கண்டார்கள். அவன் அடிகளில் வீழ்ந்து வணங்கினார்கள். அவர்கள் பலவாறு புலம்பி இந்திரனை நோக்கி எங்கள் அரசே! நீர் அசுரர் வசத்தில் எங்களை விட்டுவிட்டு நீங்கினீர்; இஃது உமக்குத்தகுமா? நீரன்றோ எங்களை ஆளும் நாயகர்? இப்போது சூரபன்மன் வருத்துகிறான். எங்களால் தாங்க முடியவில்லை; நாங்கள் துயரமுற்றிருக்கையில் எங்களைப் பாதுகாவாமல் நீவிர் மட்டும் இங்குவந்து ஒளிந்திருப்பது தகுமோ? அசுரர்கள் இறக்கவும். எங்கள் துன்பம் தீரவும் ஒரு வழி சொல்ல வேண்டுகிறோம்! என்று வேண்டிக்கொண்டார்கள்.

இந்திரன் மறுமொழி

இந்திரன் தேவர்கள் கூறியவற்றைக் கேட்டு நெடுநேரம் யோசித்தான். அயர்ந்து பெருமூச்சு விட்டு தேவர்களே! நம் துன்பங்கள் யாவும் நீங்கும் பொருட்டு இங்கு வந்து சிவபெருமானைப் பூசித்துத் தவஞ்செய்துகொண்டிருந்தேன்; தேவர்களே! நாம் அவுணர்கள் இட்ட பணிகளைச் செய்து வருந்திப் பெருமைகளை இழந்துவிட்டோம்; இனி, நாமெல்லாம் திருக்கயிலாய மலைக்குச் சென்று சிவபெருமானைத் தரிசித்து நம் குறைகளை முறையிட்டுத் துயர்களை நீக்கிக் கொள்ளுவோம்; வாருங்கள்! என்றான்.

தேவர்கள் திருக்கயிலாயம் செல்ல இணங்குதல்

இந்திரன் இயம்பியவற்றைக் கேட்டுத் தேவர்கள். கார்காலத்தைக் கண்ட மயில் போலக் கூத்தாடி மின்னலைக்கண்ட தாழைபோல மகிழ்ந்தார்கள் அரசே! நீரே எங்களுக்குத் தந்தையும், குருவும், தெய்வமும், தவமும், செல்வமும், அறிவும், பிறவும் ஆகுவீர்; முன்னாளில் எங்களை வருத்திய அசுரர்களை வதைத்தீர்; இப்பொழுதும் சூரபன்மனை வதை செய்ய வழிதேடுகிறீர்; நீரே முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் துணை ஆவிர்; ஆதலால் எங்கள் குறை நீங்கும்பொருட்டுச் சிவபெரு மானிடத்தே திருக்காயிலாயத்திற்கு நீர் எங்களையும் அழைத்துக் கொண்டு செல்வீராக! என்றார்கள். இந்திரன் அதற்கு இணங்கி. அவ்வாறே உங்களையும் அழைத்துச் செல்கிறேன் என்று கூறி. அவர்களைச் சிறிது நேரம் அவ்விடத்திலேயே இருக்கச்செய்து. தன் மனைவியாகிய இந்திராணி இருக்கும் இடத்திற்குச் சென்றான்.

இந்திராணியிடம் இந்திரன் செல்லுதல்

இந்திரன் வருகையைக் கண்ட இந்திராணி, எதிர்கொண்டு வணங்கித் தொழுது என் ஐயனே! தாங்கள் இங்கே ஓர் எண்ணத்துடன் வந்த காரணம் யாது? என வினவினாள். இந்திரன் அதனைக்கேட்டு, சூரபன்மன் இட்ட பணிகளால் வருந்திய தேவர்கள் சிலர் என்னிடம் வந்து தங்கள் துன்பங்களைக் கூறிப் புலம்பினார்கள். அவர்களின் துன்பங்களைச் சிவபெருமானிடம் சென்று விண்ணப்பம் செய்தால். அவர் அசுரர்களை அழித்துப் பொன்னுலகத்தை நமக்குத் தந்தருள்வார். ஆதலால் தேவர்களோடு நான் திருக்கயிலாய மலைக்குப் போகின்றேன். இதனை உனக்குச் சொல்லவே இங்கு வந்தேன் என்றான்.

இந்திராணியின் துயரம்

இந்திரன் கூறிய மொழிகளைக் கேட்ட இந்திராணி. துன்பக் கடலில் ஆழ்ந்து அறிவிழந்து மயங்கி மூர்ச்சித்தாள். இந்திரன் அவள் மயக்கத்தைத் தீர்த்து அறிவு வரும் வழிகளைச் செய்தான். இந்திராணி, சிறிது மயக்கம் தெளிந்து மனம் நடுங்கி இந்திரனை நோக்கி, என் ஐயனே! அடியேன் பொன்னுலகை விட்டுப் பூவுலகு வந்தும், உம்முடன் இருத்தலினாலே மகிழ்ந்திருந்தேன், சக்கரவாகப்பட்சிக்குச் சந்திரனும் வானம் பாடிக்கு மேகமும் துணையாவதுபோல், என் துயரம் நீங்க நீரே துணையாவீர்; உம்மைப் பிரிந்து நான் உயிரோடு இருந்தாலும் துணைவேறொருவரும் இல்லை; தீய அவுணர்கள் வந்து தொல்லை புரிவார்கள்; அவர்கள் பல மாயங்களிலும் வல்லவர்கள்; இழிதொழிலாளர்கள்; பழிக்குப் அஞ்சாதவர்கள்; இங்கு நம் புத்திரனாகிய சயந்தனும் இல்லை; தேவர்களும் இல்லை, ஐராவதமும் இல்லை வேறே பெண்களும் இல்லை. பெண்ணாகிய யான் ஒருத்தி தனியே இருத்தற்கு அச்சமில்லாமல் இருக்குமா? பாவத்தையே செய்யும் அசுரர்கள் என்னைக் காணின் ஓடிவந்து பற்றி அடாத காரியங்களைச் செய்ய முயலுவர்; அதனால் வரும் பழியெல்லாம் உம்மையே சாரும்; ஆதலால் நான் உம்மைவிட்டுத் தனித்திருக்க மாட்டேன்; திருக்கயிலாய மலைக்கு நானும் உமது பின்னே வருகின்றேன்; புறப்படும் என்று கூறி எழுந்தாள்.

இந்திரன் இந்திராணி கூறிவற்றைக் கேட்டுச் சிறிது நேரம் யோசித்தான்; பிறகு அன்புடன் அவளைப் பார்த்து நீ வருந்தாதே; உனக்குத் துணை இல்லாது போனாலன்றோ நீ என்னுடன் வரவேண்டும்? சிவபெருமானும் திருமாலும் கூடிப் பெற்ற ஐயனார் நமக்கு ஒப்பற்ற காவலாய் இருக்கின்றார்; அவர் இருக்கும்போது நீ வருந்துதல் தகுதியன்று; அவரை வருக என்று அன்புடன் தியானித்தால் இங்கே வருவார்; நான் திருக்கயிலாயமலைக்குப்போய்த் திரும்பி வருமளவும் அவரிடம் உன்னை அடைக்கலமாகக் கொடுப்பேன்; அந்த ஐயனாரே உன்னைக் காத்தருள்வார்; நீ அஞ்சாதிருப்பாயாக! என்று கூறித் தேற்றினான். அப்போது அயிராணி அந்த ஐயனாருடைய வரலாறு என்ன? சொல்லுங்கள் என்று வினவ இந்திரன் சொல்லலுற்றான் (திருவிருத்தம்-21 ஆகத் திருவிருத்தம்-1,429)

மகா சாத்தாப் படலம்

திருப்பாற்கடலைக் கடைதல்

முன்னொரு காலத்தில் திருமால் முதலிய தேவர்கள், சிவபெருமான் திருவருளைப் பெறாமல் திருப்பாற்கடலைக் கடைந்தார்கள். அப்பொழுது அதனின்றும் ஆலகால விடம் எழுந்தது, அதனைக் கண்டு தேவர்கள் அனைவரும் நடுநடுங்கி ஓடிக் கயிலாயமடைந்து சிவபெருமானை வணங்கித் துதித்தார்கள். சிவபெருமான் அவர்களுக்கு அபயமளித்து, விடத்தைத் தாம் உண்டு கண்டத்தடக்கி அவர்களைக் காத்து திருமால் முதலிய தேவர்களை நோக்கி மீண்டும் பாற்கடலைக் கடையுங்கள்; அமுதம் உண்டாகும்! என்று பணித்தருளினார். திருமால் முதலிய தேவர்கள் பாற்கடலை முன்போலப் பின்னரும் கடைந்தார்கள். கடையத் தொடங்கிய போது விநாயகக் கடவுளை வழிபாடு செய்யவில்லை அதனால், மந்திரமலையாகிய மத்துக் குலைந்து பாதாளத்தில் ஆழ்ந்தது, பிறகு யாவரும் விநாயகக் கடவுளைப் பூசித்து வணங்கினார்கள். விநாயகக் கடவுளுடைய திருவருளால் மந்தரமலை பாதலத்தினின்றும் மேலே எழும்பிவந்து முன்போல் நிலைபெற்று நின்றது.

அமுதமும் மோகினியும் தோன்றுதல்

திருமால் முதலிய தேவர்கள் மேலும் பாற்கடலைக் கடையப் பொற்குடத்தோடு அமிர்தம் எழுந்தது. அங்கிருந்த தேவர்களும் அசுரர்களும் விருப்புடன் அதனைச் சூழ்ந்து நின்று தனித்தனியே இஃது எங்களால் வந்தது; ஆதலால் எங்களுக்கே உரியது;  எங்களுக்கே உரியது என்று கூறி, ஆரவாரஞ்செய்து அதனால் தங்களுக்குள் மாறுபட்டு போர் செய்ய எண்ணினார்கள் அதனைத் திருமால் கண்டு, அவர்கள் பிணக்கை ஒழிக்க நினைத்து மூவுலகிலும் பார்ப்பதற்கரிய ஒரு மோகினி வடிவை எடுத்து நின்றார். அம்மோகினியின் அழகைக் கண்ட அவுணர்கள், அமிர்தத்தை விட்டுவிட்டுக் காமப்பித்துக் கொண்டு அறிவிழந்து மயங்கி நின்றார்கள். தேவர்கட்கும் மோகினியிடத்திலே காதல் உண்டாயிற்று.

எண்ணா அவுணர் தொகையல்லதை
எந்தை மாயம்
உண்ணாடு வானோர்களும் பெண்மயல்
உற்று நின்றார்
மண்ணாசை தன்னில் பொருளாசையின்
மாய வாழ்க்கைப்
பெண்ணாசை நீங்கல் எளிதோ
பெரியோர் தமக்கும்?

திருமால் சூழ்ச்சி

இவ்வாறு இரு திறத்தாரும் மயங்கி நிற்கையில் மோகினி வடிவங் கொண்ட திருமால் அவர்களை நோக்கி, நீங்கள் போரை ஒழிமின்; இங்கு நான் இருக்கின்றேன்; அமிர்தமும்ம் இருக்கின்றது; இவ்விரண்டுள் நீவிர் விரும்பியதொன்றை விரைந்து கைக்கொள்ளுங்கள்! என்றார். அசுரர்கள் மோகினியைப் பார்த்து எங்கட்கு நீ தான் வேண்டும்! என்றார்கள். தேவர்கள் அமிர்தத்தைத் தூக்கிக் கொண்டு ஒருபுறம் சென்றார்கள். அசுரர்கள் மோகினியை அழைத்துக் கொண்டு ஒருபுறம் போனார்கள். தம்மை அழைத்துச் சென்ற அசுரர்களை மோகினி வடிவங்கொண்ட திருமால் நோக்கி சயனத்தில் என்னைத் தழுவவல்ல வீரன் ஒருவன் உளனோ? அவனை இன்னும் கண்டிலேன்! என்று கூறினார்.  அசுரர்கள் ஒவ்வொருவரும் இவ்வார்த்தையைக் கேட்டு நானே எவரிலும் வலியேன் வீரனும் யானே! என்று தனித்தனியே கூறி என்னையே சேர்வாய்! என்று வந்து கூடி, அதனால் பகை மூண்டு தம்முள் சண்டையிட்டு அழிந்தார்கள்.

கள்ளத் தேவர்கள் அமிர்தம் உண்ணல்

அசுரர்களில் இருவர் திருமாலின் மாயச் சூழ்ச்சியை அறிந்து கொண்டார்கள்; யாமும் மற்றவர்களைப் போல் வீணாய் போர்செய்து அழியலாகாது என்று உறுதி செய்து. தேவ வடிவங்கொண்டு தேவர்களோடு போய்க் கலந்துநின்றார்கள். அசுரர்கள் தம்மில் பொருது அழியக்கண்ட திருமால் மோகினி வடிவத்தை விடுத்துத் தம் பழைய வடிவைக்கொண்டு தேவர் கூட்டத்துள் சென்றார். தேவர்களுக்கு அமிர்தத்தைப் பங்கிட்டுக் கொடுத்தார். தேவ வடிவத்திலிருந்த அவுணர்கள் இருவரும் தங்களுக்குத் திருமால் கொடுத்த அமிர்தத்தை மந்திரத்தோடு உட்கொள்ளாமல் தேவர்களுக்கு முந்தி விரைந்து உட்கொண்டனர்.

கள்ளத் தேவர்கள் கிரகங்கள் ஆதல்

அதனைச் சூரிய சந்திரர்கள் கண்டு இவர்கள் கள்ளத் தேவர்கள் என்பதைத் திருமாலுக்கு கண்ணால் குறித்துக் காட்டினார்கள். திருமால் அவர்களைக் கண்டு, கோபித்துக் கையிலிருந்த அகப்பையினால் அவர்களின் தலையில் அடித்துத் தலையைத் துண்டாக்கினார். உண்ட அமிர்தம் கண்டத்தை அடையுமுன் தலைகள் துணிக்கப்பட்டமையால் அவர்களுடைய உடல்கள் அழிந்தும், தலைகள் அழியாமலும் இருந்தன. தலைகள் அழியாத அவர்களிருவரையும் திருமால் நோக்கி, நீங்கள் அமிர்தம் உண்டமையால் விண்ணுலகில் இருக்கத் தகுந்தவர்கள் என்று சிந்தித்துச் சிவானுக்கிரகத்தினாலே, நீங்கள் கிரகங்களாகுதிர் என்று பணித்தார் அவர்கள் இருவரும் சிவபெருமான் அருள் பெற்று இராகு கேது என்னும் பெயரையுடைய கரும்பாம்பும், செம்பாம்புமாகித் தம்மைக் காட்டிக்கொடுத்த சூரியனையும் சந்திரனையும் ஒவ்வொரு காலத்தில் மறைத்துச் சூரியன் முதலிய ஏழு கிரகங்களோடும் தாமும் சேர்ந்து ஒன்பது கிரகங்களாக எண்ணப்படுவாராயினர்.

சிவபெருமானும் மோகினியும்

திருமால் தாம் முன்பு கொண்ட மோகினி வடிவத்தோடு திருப்பாற் கடலின் கரையில் அமர்ந்திருந்தார். சிவபெருமான் தம்முடைய நால்வகைச் சக்திகளுள் திருமாலும் ஒன்று என்பதைத் தெரிவத்தருளும் பொருட்டு அழகியதோர் திருவுருவம் தாங்கி அங்கு வந்தார். திருமால் சிவபெருமானைக் கண்டு ஆசை கொண்டார். அப்போது சிவபெருமானும், உன்னைக் கூடும் வேட்கை எமக்கும் உண்டு; நீ கொண்ட வேடம் மிக இனிது! என்றார். மோகினி வடிவம் கொண்ட திருமால் அதுகேட்டு வெட்கமுற்று. உலகமாதாவாகிய உமாதேவியார் தேவரீரை நீங்காமல் காதலித்திருக்க தேவரீர் அடியேனை விரும்பிநிற்கும் காரணம் என்ன? முன்னொரு காலத்தில் நாங்கள் நான்முகனுடைய படைப்புத் தொழில் கைகூட உமாதேவி யாரைத் தேவரீர் சேரும்படி வேண்டினோம். தேவரீருக்கு அந்த உமாதேவியாரிடத்தும் ஆசை உண்டோ எனில் இல்லை. தேவரீர் மேனோக்கிய வீரியமுடையவர் அல்லவா? உமக்கு எவரிடத்தும் விருப்பும் வெறுப்பும் கிடையாது. அவ்வாறு இருக்க அடியேனைக் கருதி வந்த காரணம் யாதோ அறியேன்! ஆடவர் ஆடவரோடு கூடும் வழக்கம் இல்லை. ஆதலால் எம்பெருமானே! நீர் அடியேனை வலிந்து கூடுதல் முறையோ? என்று வினவினார். சிவபெருமான் அதுகேட்டு, திருமாலே! நீயும் நமது சத்திகளில் ஒன்று. தாருகாவனத்திற்குச் சென்ற அன்று நீ ஒரு பெண்ணானாய், பழைய நான்முகன் இறந்த போதிலும் நாம் உன்னை வந்து சேர்ந்தோம். இந்த நான்முகனை நீ தாயாய் உந்தியினால் பெற்றாய். ஆதலால் நீ நமக்கு ஒரு சக்தியாகும். இப்போது உன்னைச் சேர வந்தோம் வருவாய்! என்று அவர் கரம்பற்ற வந்தார். திருமால் நாணி ஓடினார். சிவபெருமான் அவரைத் தொடர்ந்து பற்றி நாவலந்தீவில் வடதிசையின் கடற்கரையிலுள்ள சாலமரநிழலை அடைந்தார். அங்கே மோகினிவடிவங்கொண்ட திருமால் எம்பெருமானுடன் இன்புறக் கூடினார்.

சாளக்கிராமம்

அவர்கள் இருவரும் கூடியகாலத்துக் கான்று உமிழ்ந்த நீர் கண்டகி என்னும் நதியாகப் பாய்ந்தது, அந் நீரலே வச்சிரதந்தி என்னும் நதியாகப் பாய்ந்தது. அந் நீரிலே வச்சிரதந்தி என்னும் புழுக்கள் உள்ளும் புறமும் சக்கரக்குறியோடு பொன்வண்ணமாய் வரிசை வரிசையாகத் தோன்றின. அப்புழுக்கள் கண்டகி நதியிலுள்ள மண்ணினால் கூடுகளை உண்டாக்கும் அக் கூட்டினுள் சிலநாள் தங்கி வசித்து இறக்கும் இறந்தபின் அக் கூடுகள் சக்கரக் குறியுடையனவாய்க் காணப்படும். அவற்றைக் கண்டகி நதிக் கரையில் கொண்டுவந்து ஒதுக்கிவிடும் அக் கூடுகளை உலகத்தார் எடுத்துச் சென்று அதனுள்ளே இருக்கும் பொன்னை எடுத்துக் கொள்வர். அவற்றின் குறிகளைப் பார்த்து இஃது இன்ன இன்ன முகூர்த்தம் என்று பிரித்து அறிந்துகொள்வர் அவற்றைத் திருமாலாகவே நினைத்துப் பூசிப்பார்கள். அதன் பெயர் சாளக்கிராமம் என்பதாம்.

ஐயனார் தோற்றம்

சிவபெருமானும் திருமாலும் கூடியகாலத்துக் கரிய மேனியும் சிவந்த சடையும், செண்டு ஏந்திய கையுமாய் உக்கிரத்தோடு ஒரு குமாரர் அவதரித்தார். சிவபெருமான் அவருக்கு அரிகரபுத்திரன் என்னும் பெயரைச் சூட்டினார். பல வரங்களைத் தந்து உருத்திரர்களுள் ஒருவராக ஆக்கினார் ஒரு புவனத்தைக் கொடுத்துத் தேவர்களும் முனிவர்களும் வணங்கும் முதன்மையோடு அப்புவனத் தலைவராக்கினார். பிறகு சிவபெருமான் திருமாலுக்கும் ஐயனாருக்கும் விடை கொடுத்து மறைந்தருளினார். அரிகரபுத்திரராகிய ஐயனார் எல்லோராலும் வணங்கத்தக்க மேன்மையுடையவர். அவருக்கு நிகரானவர் ஒருவருமில்லை. அவர் உன்னை வந்து பாதுகாப்பார்! என்று இந்திரன் ஐயனாருடைய வரலாற்றையும் மேன்மைகளையும் எடுத்துக்கூறலும் இந்திராணி அதனைக்கேட்டுச் சீர்காழியிலேயே தங்கியிருக்க உடன்பட்டாள்.

இந்திரனுக்கு ஐயனார் காட்சியருளல்

இந்திரன் ஐயனாரை வரும்படி தியானித்தான் அவர் பூதகனங்கள் சூழ வெள்ளை யானையின்மேல் பூரணை, புட்களை என்னும் இரு தேவியர்களோடு ஏறிவந்து இந்திரனே! நீ விரும்பியது யாது? என்றார். இந்திரன் அவர் அடிகளில் வீழ்ந்து வணங்கிப் போற்றி எம்பெருமானே! சூரபன்மனுக்குப் பயந்து நான் என் மனைவியுடன் இங்கு வந்து மூங்கிலாக மறைந்து சிவபெருமானை நோக்கித் தவம் செய்து கொண்டிருந்தேன்; சூரபன்மன் செய்யும்துன்பத்தைத் தாங்க முடியாமல் தேவர்கள் அடியேனிடம் வந்து முறையிட்டார்கள்; அதனைச் சிவபெருமானிடம் விண்ணப்பிக்கத் திருக் கயிலாயமலைக்குச் செல்லுகின்றேன்; இவள் தன்னை அவுணர்கள் கைப்பற்றுவார்கள் என்று இவ் வனத்தில் தனித்திருக்க அஞ்சுகின்றாள்; நான் மீண்டு வரும்வரையும் உம்மிடத்து இவளை அடைக்கலமாக வைத்தேன்; காத்தருளும்! என்றான் ஐயனார் இந்திரனே! உனது மனைவிக்குத் துன்பம் வாராமல் பாதுகாப்பேன்; தனியே இருக்கின்றாள் என்று நீ நினையாதே; கயிலைக்குச் செல்லக்கடவை! என்று இந்திரனுக்கு அருள்புரிந்து ஒரு பக்கம் போய்த் தனது வீரருள் வாட்போரில் வெற்றிகண்ட மகாகாளர் என்பவரை நோக்கி இந்திரன் கயிலாயமலைக்குச் செல்கின்றான். அவன் அங்கிருந்து திரும்பும்வரையில் தனித்திருக்கும் அவன் மனைவியாகிய இந்திராணியிடம் ஒரு தீங்கும் அணுகவிடாமல் நீ பாதுகாத்துக்கொள்ளக்கடவாய்! என்று கட்டளையிட்டுச் சென்றார்.

இந்திராதிதேவர் முதல்வாயிலில் தடையுற்று நிற்றல்

இந்திரன் இந்திராணியை நோக்கி ஐயனார் உன்னைப் பாதுகாப்பார் கவலையுறாதே! என்று கூறி அவளை அங்கேயே இருக்கச்செய்தான் தான் தேவர்களை அழைத்துக்கொண்டு திருக்கயிலாயமலைக்குப் போய் சேர்ந்தான்.

அசமுகி வருதல்

இந்திரன் திருக்கயிலாயமலைக்குச் சென்றபிறகு அவன் சென்ற காரியத்தில் வெற்றியுண்டாக எண்ணிய இந்திராணி அரம்பையர் சூழச் சீகாழிச் சண்பகவனத்திலே தவஞ்செய்து கொண்டிருந்தாள். இந்திரன் நெடுநாளாக வாராதிருக்கவே இந்திராணி மெலிந்து வருந்தினாள். அப்போது பொறுமை, கருணை, புகழ், தருமம், நிறை, நாணம் , கற்பு முதலிய நற்குண்ங்கள் ஒன்றும் இல்லாதவளும், கொலை, களவு, பொய் முதலிய தீச்செயல்கள் புரிபவளும், எவரையும் வலிந்து கூடுபவளும், பலவாலிபர் கூடினும் சற்றும் இளைக்காதவளும், மூவுலகங்களையும் ஒரு நாழிகையில் சுற்றிவரக்கூடியவளும். எத்துணை வல்லமை பொருந்தியவர்களையும் போரில் தோற்கடிக்கக் கூடியவளும், மாயவித்தைகளில் வல்லவளும், சூர பன்மனுக்குத் தங்கையும், ஆட்டுத் தலையையுடையவளும், கருத்த உடலை உடையவளு, சிவந்த தலைமயிரையுடையவளுமாகிய அசமுகி என்னும் கொடியவள். சூலப்படையை ஏந்தித் தன் தோழி துன்முகி என்பாளோடு ஆலகால விடம் போல அச்சண்பகவனத்தின் கண்ணே வந்தாள்

அசமுகி இந்திராணியை அடைதல்

அசமுகி அவ்வனத்தின் அழகைக் கண்டு வியந்து அதனுள் புகுந்து வருங்கால், இந்திராணியைப் பாதுகாத்துவரும் வீரமகாகாளர் அவள் வருகையை உணர்ந்து அவள் செய்யுங் குற்றத்திற்குத் தக்க தண்டனை அளிக்க மறைந்துநின்று பார்த்துக் கொண்டிருந்தார். அதனை அசமுகி அறியாதவளாய். துன்முகி உடன்வர. அச்சோலை எங்குந்திரிந்து பார்த்துக் கொண்டு வரும்பொழுது தவஞ்செய்து கொண்டிருந்த இந்திராணியைக் கண்டாள்; இவள் என் தமையனுக்குப் பயந்து இங்கு வந்துள்ளாள்; இவள் இங்கு இருப்பதை அறியாமல் பல இடங்களில் தேட அசுரர்களை எம் தமையன் விடுத்தனன்; இப்போது நான் இவளைக் கண்டேன்! என்று மனத்துள் மகிழ்ச்சி கொண்டாள். இவள் கிடைக்கமாட்டாளோ என்று எண்ணி என் தமையன் மெலிகின்றான். இவளைக் கொண்டுபோய் அவனிடஞ்சேர்ப்பேன். இவள் தனியே இருக்கிறாள். துøணாயாக ஒருவரும் இல்லை இந்திரன் வருவதற்கு முன் இவளைக் கொண்டுபோவேன்! என்று விரைந்து இந்திராணியிடம் வந்தாள்.

அசமுகி-இந்திராணி

அசமுகி பேரிடிபோலக் கடுமொழி கூறிக்கொண்டு அருகே வருவதைக் கண்ட இந்திராணி இயமனைப் பார்த்தாற் போலப் பயந்து. இவள் அசுர மாதோ? பேய் மகளோ? பூதமோ? வேறு யாரோ? யான் அறியேன் என்று விரைந்து எழுந்தாள். அசமுகி இந்திராணியை நோக்கி நில் என்று எதிரே வந்து, இந்திராணியே! உன்னுடைய இளமையும் பேரழகும் வீணாகும்வண்ணம் நீ தவஞ்செய்தல் சரியன்று. வடிவழகில் இலக்குமியும் உனக்கு நிகராகாள் என் தமையனாகிய சூரபன்மன் உன்னைச் சேரும்படி தவஞ்செய்து கொண்டிருக்கிறான். இந்திரன் உன் அழகுக்கு ஏற்ற நாயகன் அல்லன் அவன் விண்ணுலகம் ஒன்றிற்கே அரசன். சூரபன்மனோ பல அண்டங்களையும் ஒருங்கே ஆள்பவன்; அழிவில்லாதவன்; பழியில்லாதவன் துன்பம் அற்றவன்; எவருக்கும் வணங்காதவன். சூரபன்மனுக்குக் குற்றேவல் புரியும் இந்திரனை நாயகனாகக் கொண்டு ஏன் மெலிகின்றாய்? தேவர்களும் அசுரர்களும், அரம்பையர்களும் குற்றேவல் புரிய மும்மூர்த்திகளாலும் புகழப்படுகின்ற சூரபன்மனுக்கு உன்னை மனைவியாக்குவேன்; அவன் தன் பட்டத்தரசி பதுமகோமளையையும் மற்றைய பெண்களையும் வெறுத்து உன்மீது அளவுகடந்த ஆசைகொள்வான்; இஃது உண்மை; ஆதலால் என்னோடு விரைந்து வருவாயாக! என்று  கூறினாள்.

இந்திராணி மறுத்துரைத்தல்

அசமுகி கூறிய கொடுமொழிகளைக்கேட்ட இந்திராணி, தன் செவித் துளையில் அக்கினியில் காய்ச்சிய வேல் புகுந்தாற்போல் வருந்தி விம்மினாள். அசமுகியை நோக்கி, எடி! நீ இங்கே சொன்ன தீய மொழிகளைக் கேட்டவர்கள் நரகத்தை அடைவர். இவ்வார்த்தைகளைச் சொன்ன உனக்கு வரும் தீமையை யார் இவ்வளவென்று வரையறுத்துச் சொல்வர்? காசிப முனிவனுக்கு மகளாய்ப் பிறந்த நீ அறிவில்லாதவர்களைப் போல் அநீதி பேசலாமா? தமக்கு இன்பம் விரும்புவோர் பிறர்க்கு நன்மையே செய்வர். தமக்குத் தாமே துன்பத்தைத் தேடிக் கொள்பவரே பிறர்க்குத் தீமையைச் செய்வர். தருமம். கருமம், கற்பு, பெருமை இவற்றை நீ சற்றும் உணர்ந்து பார்த்தாயில்லை. செல்வம், வலிமை, ஆயுள், கீர்த்தி என்னும் இவற்றை இழப்பவர்களுக்கே இத்தகைய தீய சிந்தனைகள் எழும். நீ இவற்றை நினைக்காமல் வாழ்வாயாக! நான் இந்திரனையன்றி வேறோருவரையும் விரும்பேன். நான் தீதில்லாத கற்பினையுடையேன். நீ கூறுகின்ற மொழிகள் உன் சுற்றத்தார்க்கு நன்மை பயப்பன அல்ல என் கணவனாகிய இந்திரன் மீளாத துன்பத்தில் ஆழ்ந்திருக்கிறான் என்று சொல்லுகிறாய். அது நாளைக்கு உங்களுக்கு வராதோ? நீ பதியற்றவள் ஆகையால் அறிவு மயங்கி இவ்வாறு தீயவற்றைப் பேசினாய்! இஃது உனக்கு அழகல்ல; நீ உய்யும்படி விரும்பினால் இதனை மறந்துவிடு; என் மானம் என் உயிரையும் ஐம்பொறிகளையும் பாதுகாத்துக் கொள்ளும்; எனக்கு எங்கும் காவல் உண்டு; ஆகையால் நீ விரைந்து செல்வாயாக! என்றாள்.

அசமுகி இந்திராணியைத் துன்புறுத்தல்

இந்திராணி கூறியவற்றைக் கேட்ட அசமுகி, தன் உதட்டைக் கடித்தாள்; கையோடு கையைப் புடைத்தாள்; நன்று நன்று என்று நகைத்துச் சீறி இந்திராணியே! நான் உனக்கு இனிய மொழிகளைப் புகன்றேன். நீ என் விருப்பத்திற்கு இணங்காது மறுத்துக் கூறினாய்; உன்னை நான் கொன்று தின்றுவிடுவேன் என் தமையனாகிய சூரபன்மன் உன்னை விரும்புவதால் விட்டேன். நான் உன்னைப் பிடித்து இழுத்துக்கொண்டு செல்லுகிறேன்; பார்! இஃது உண்மை மும்மூர்த்திகளும் மற்றைய தேவர்களும் என்னோடு வந்து யுத்தம் செய்து தடுத்தாலும் உன்னை விடமாட்டேன்; விரைவில் கொண்டு போகின்றேன்; இதனை நீ காண்பாய் என்று கூறி. இந்திராணி கையைப் பிடித்துஇழுத்துக் கொண்டு விரைந்து சென்றாள். இந்திராணி அசமுகியின் எமபாசம் போன்ற கைகளில் அகப்பட்டுப் பூனை வாயில் அகப்பட்ட புள்ளின் பெடையைப் போல மதிமயங்கி ஐயகோ! என்று வாய்விட்டு அலறிக் கண்ணீர் வடியத் தேம்பினாள்.

இந்திராணியின் ஓலம்

அப்போது இந்திராணி, அருகில் ஒருவரையும் காணாமையால் தப்பும் வகை அறியாது வருந்தி, திருமாலும் சிவபிரானும் பெற்ற ஐயனே! ஓலம்; தேவர்களுக்கு முதல்வனே! ஓலம்; செண்டு ஏந்திய கையனே! ஓலம்; வீரனே!; எங்கள் கடவுளே ஓலம்; மெய்யார்க்கு மெய்யனே! ஓலம்; ஓலம்; உருத்திரர் என்ற வேதங்கள் துதிக்கும் காரணக்கடவுளே! ஓலம்; கடல் வண்ணத்தனாகிய எந்தையே! ஓலம்; பூரணை மணாளனே! ஓலம்; புட்கலை கணவா! ஓலம்; வெள்ளை யானையின் மேல் வரும் பெருமானே! ஓலம் என்று ஐயனாரைக் குறித்துப் பலவாறு கதறினாள்.

பையரா அமளி யானும் பரம்பொருள் முதலும் நல்கும்
ஐயனே! ஓலம்; விண்ணோர்க்காதியே! ஓலம்; செண்டார்
கையனே! ஓலம்; எங்கள் கடவுளே! ஓலம்; மெய்யர்
மெய்யனே! ஓலம்; தொல்சீர் வீரனேஓலம்; ஓலம்
ஆரணச் சுருதி யோர்சார் அடலுருந் திரனென்று ஏத்துங்
காரணக் கடவுள்!ஓலம் கடல்நிறந்து எந்தாய்! ஓலம்;
பூரணைக் கிறைவா! ஓலம்; புட்கலை கணவா! ஓலம்;
வாரணத்திறைமேற்கொண்டுவரும்பிரான்! ஓலம் என்றாள்

வீரமகாகாளர்-அசமுகி

இந்திராணியின் ஓலம் ஐயனாரின் படைத்தலைவராகிய வீரமகாகாளர் செவிகளை எட்டியது. வீரமகாகாளர் தன் வாட்படையைச் சுழற்றி இடிபோல் ஆர்த்து ஓடி வந்தார் அசமுகியை நோக்கி களவு செய்துகொண்டு எங்கு செல்கின்றாய்? நில்! என்று அதட்டினார். விரைந்து வந்து அயிராணியை நோக்கி, அம்மே! பாதகியாகிய அசமுகிக்குச் சிறிதும் அஞ்சாதே. உன்னைத் தீண்டிய இவளுடைய கையைத் துண்டித்து விடுவிப்பேன். என்றார். வீரமகாகாளருடைய வார்த்தையைக் கேட்ட இந்திராணி மழையைக் கண்ட பயிர் போல உயிர்பெற்றாள். அசமுகி அவரைக்கண்டு மும்மூர்த்திகளும், இந்திரனும் திக்குப்பாலகர்களும் என்முன் நில்லார்! தேவர்களில் ஒருவனோ என்னை எதிர்த்து வருபவன்? என்று வெறித்துப் பார்த்துத் தன் பற்களைக் கடித்து ஆரவாரம் செய்துகொண்டு நின்றாள். வீரமகாகாளர் அவளை அணுகி பெண்ணே! தவம் பூண்ட இந்திராணியைத் தமியள் என்று நீ வஞ்சனையால் பற்றிச்செல்கின்றாய்; நீ இப்பொழுதே இவளை விடுத்துப்போனால், நீ செய்த பிழையைப் பொறுப்பேன்; உன்னைக் கொல்லமாட்டேன்; அஞ்சாதே என்றார். அசமுகி வலிமையோடு இவளைக் காப்பாற்று என்று இப்பணியை உனக்கு இட்டவர் யார்? அவர் பெயரைக் கேட்க விரும்புகின்றேன்; சொல்வாய்! என்றாள். வீரமகாகாளர். பூவுலகம் முதலாகிய மூவுலகங்களையும் பாதுகாப்பவன்; மேகம் போலக் கருநிறமுடையவன்; தெய்வத்தன்மை பொருந்திய வெள்ளை யானையை வாகனமாகவுடையவன்; ஐயன் என்னும் பெயர் உடையவன். அவனே எனக்கு இப்பணியைத் தந்துள்ளான் எனது பெயர் வீரர்களில் வீரனாகிய வீரமகாகாளன் என்று கூறினார்

தாரணி முதல மூன்றுந்
தலையளி புரிந்து காப்பான்
காரணி செறிந்துற் றனன்
கரியவன்; கடவுள் வெள்ளை
வாரண முடைய ஐயன்
மற்றிது பணித்தான்; என்பேர்
வீரரில் வீர னான
வீரமா காளன் என்றான்

வீரமாகாளர் கூறியது இந்திரனுக்கும், ஐயனாருக்கும் பொதுவாக இருத்தலின். இங்கு வந்தவன் இந்திரன் ஏவலாள் என்று அசமுகி எண்ணி, அவரைக் கொல்லத் தன் கையிலிருந்த முத்தலைச் சூலத்தை எறிந்தாள். வீரமாகாளர் அதனை வாளினால் வெட்டி இருதுண்டாக்கினார். அசமுகி துன்முகியின் கையிலிருந்த சூலத்தை வாங்கி அவளிடம் இந்திராணியைக் கொடுத்தாள் கூற்றுவனும் அஞ்ச ஆரவாரம் செய்து வீரமகாகாளர் மார்பிலே குத்தும்படி சூலத்தை நீட்டினாள் வீரமாகாளர் அதனையும் வாளினால் வெட்டி வீழ்த்தினார். அசமுகி பின்வாங்கிப் போய் ஒரு மலையைப்பறித்து அவர்மேல் எறிந்தாள். அவர் தம் வாளினால் அதனையும் அழித்தார். அவர் வாட்படையும் ஒடிந்தது. அசமுகி அதனைப் பார்த்து இடிபோல் ஆரவாரம் செய்து வீரமகாகாளனே! எல்லாவுலகங்களையும் இனிதாளும் சூரபன்மாவாகி என் தமையனுடைய தோள்களிலே சேர்க்கும்படி இவளைக் கொண்டுபோகிறேன்; நீ தடுத்தல் முறையாகாது; என் தமையனாகிய தாரகாசுரனுடைய சேனைவீரர்கள் வந்தால் உன்னைக் கொல்லுவார்கள். அல்லாமலும் நானே உன்னை அடித்துக் கொன்று தின்றுவிடுவேன்; அவ்வாறு தின்பதால் என்னுடைய பெரும்பசி அடங்காது என்று எண்ணி உன்னை விடுத்தேன்; நீ வீணாக இறந்து போகாமல் பிழைத்து ஓடிப் போ! என்றாள்.

அசமுகியின் வார்த்தைகளைக் கேட்ட வீரமகாகாளர், வாளினால் உன் சூலப்படையைத் துணித்தேன். பெண் என்று எண்ணி உன்னைக் கொல்லாது விடுத்தேன். இதனை உணர்ந்து. இந்திராணியை விட்டுவிட்டு விரைந்து ஓடிப்போ! வீணாக உன் கையைப் போக்கிக் கொள்ளாதே! என்றார். அசமுகி அதனைக் கேட்டு வாளினை இழந்து நிற்கும் இவனோடு போர் செய்தல் முறையன்று; அன்றியும் இவனை வெல்லுதல் அரிது! இனி, இந்திராணியைக் கொண்டு செல்லுதலே தகுதி என்று துணிந்து துன்முகி கைப்பட்டிருந்த இந்திராணியைப் பிடித்து இழுத்துக்கொண்டு விரைந்து சென்றாள்.

வீரமகாகாளர் அசமுகி கையை வெட்டுதல்

அதனை வீரமகாகாளர் பார்த்து, விரைந்து சென்று அசமுகி கூந்தலைக் கையால் பிடித்து இழுத்துத் தன் உடை வாளால் இந்திராணியைப் பிடித்த கையை வெட்டி , அவளை விடுவித்து அசமுகியைத் தம் காலினால் உதைத்து உருட்டினார். அதுகண்டு பயந்து அருகில் நின்ற துன்முகியை நோக்கி, ஒரு குற்றமுமில்லாத இந்திராணியை நீயும் தீண்டினாய் அல்லவா? என்று அவளுடைய கையில் ஒன்றையும் வெட்டி அவளையும் உதைத்து உருட்டினார், அசமுகியும், துன்முகியும் ஓ! என்று கதறிப் புலம்பிக் கீழே விழுந்தார்கள்.

அசமுகி புலம்பல்

வீரமகாகாளரால் வெட்டுண்டு குருதி ஒழுகநின்ற அசுர மாதர்களின்  கைகள் சூரபன்மனின் செல்வத்தைச்சுடும் கொள்ளிகள்போன்று இருந்தன. அசமுகியின் வெட்டுண்ட கையினின்று இரத்தம் ஆறுபோலப் பெருகியது. அவள் கவலையடைந்து பூமியில் வீழ்ந்து வருந்திக் கதறினாள்; பதை பதைத்தாள்; கையை நிலத்தில் அறைந்தாள்; கடகடவென்று உருண்டாள். மார்பும் முதுகும் தேயப்புரண்டாள். இவ்வுலகை அழித்துவிடுவதாகச் சூளுரைத்தாள், சூரபன்மனிடம் சென்று முறையிடவும் தீர்மானித்தாள். பிறகு சிறிதும் துன்பம் இல்லாமல் நிற்கும் இந்திராணியைப் பார்த்து சூரபதுமனின் ஆணையால் அவளையும் இந்திரனையும் சிறையெடுப்பேன் என்று சூளுரை கூறி அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

அங்கு சிறிது தூரத்தில் நின்ற வீரமகாகாளர். இந்திராணியை நோக்கி அன்னையே! நீ அசுரர்களுக்கு பயப்படாதே உன் நாயகன் வருமளவும் நான் காப்பேன்; இங்கேயே இருப்பாயாக! என்று கூறிச் சென்றார். இந்திராணிக்கு நேர்ந்த துன்பங்களை நாரதர் மூலம் தெரிந்து கொண்ட இந்திரன் கயிலையை நீங்கி, சீர்காழி அடைந்தான். வீரமாகாளரைக் கண்டு தழுவி, நன்றி மொழி கூறி ஐயனாரிடம் அனுப்பிவைத்தான்.

இதுவரை படித்தவை கந்த புராண நிகழ்ச்சிகளாகும். இனி தற்போதுள்ள நடைமுறைகள தெரிந்து கொள்வோம். இருமுடியைச் சுமந்து கொண்டு மலைக்குக் கிளம்பும் முன்னர். ஐயப்ப பக்தன் தனது வீட்டு வாயிலில் தான் இல்லாத நேரத்தில் தனது இல்லத்தையும், குடும்பத்தினரையும் பாதுகாத்துவர பகவானின் பூத கணங்களில் ஒன்றை நிறுத்தும் நோக்குடன் ஓர் தேங்காயைத் தனது வீட்டின் வாயிற்படி அருகில் உடைக்கிறான். உடனே தேங்காய் உடைத்த இடத்தில் ஓர் பூதகணம் தங்கிக் காவல் காக்கிறது.

சபரிமலை யாத்திரை முடிவுற்று வீடு நெருங்கியவுடன். யாத்திரைக் காலத்தில் நம் இல்லத்தைக் காத்து வந்த பூத கணத்தை தியானித்து வணங்கி ஐயனே! நான் யாத்திரை முடிந்து திரும்பும் வரை என் உடமைகளையும், குடும்பத்தினரையும் காத்தருளிய உங்களுக்கு எங்கள் அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இனி தாங்கள் தங்கள் இருப்பிடம் செல்வீராக என்று முன்பு தேங்காய் உடைத்த இடத்திலேயே மீண்டும் தேங்காய் உடைத்து விட்டு வீட்டுக்குள் நுழைகிறோம்

புராண காலம், வரலாற்றுக்காலம், நமது காலம் என்று காலங்கள் மாறலாம் ஆனால் இறைவன் கருணை என்றும் மாறாது. குறையாது என்பதை, கந்த புராணத்தில் இந்திராணியை ஐயன் காத்தது முதல் இன்று வரை தன் பக்தர்களின் குடும்பங்களையும் காத்து வருவதன் மூலம் அறியலாம்

மேலும் புராணங்களில் பலவற்றுள்ளும் தொன்மையானது ஸ்காந்தம் என்பார்கள் அதில் திருமுருகவேள் அவதார காலத்திற்கும் முன்பே சாத்தனார் அவதாரம் செய்து பூரணை புட்கலை எனும் இருதேவியருடன் கயிலையில் வாஸம் அந்தமும் இல்லா அருட் பெருஞ்சோதி என்று அறியலாம். இறைவனை முருகனின் தம்பியே முருகனுக்கிளையோனே என்றும் அழைப்பதை விடுத்து முருகனின் சோதரனே சரணமய்யப்பா என்று அழைப்பதே சாலப்பொருத்தமாகும்.

 
மேலும் அஷ்ட சாஸ்தா தரிசனம் »
temple

சாஸ்தா வழிபாடு! டிசம்பர் 12,2011

அஷ்டசாஸ்தா வழிபாடு யுகம் கடந்த புருஷனாக விளங்குபவர் சாஸ்தா. கிருதயுகத்தில் கந்த புராணக் கூற்றுப்படி, ... மேலும்
 
temple
ஹரிக்கும் ஹரனுக்கும் மகனாகப் பிறந்தவர் ஐயப்பன். அதாவது காக்கும் தொழிலையும், அழித்தல் தொழிலையும் ... மேலும்
 
temple
சிதம்பர ரகசியத்தில் குஹ்யரத்ன சிந்தாமணி எனும் அபூர்வமான ஸ்தோத்திரத்தில் ஸாக்ஷõத் ஸ்ரீ பரமேச்வரனால் ... மேலும்
 
temple

3. மஹா சாஸ்தா டிசம்பர் 12,2011

ஓம் மஹா சாஸ்த்ரே நமஓம் மஹாசாஸ்தாவே போற்றி! மஹாசாஸ்தா என்ற சொற்றொடர் ஸ்ரீ சாஸ்தாவின் மூல ... மேலும்
 
temple

4. சம்மோஹன சாஸ்தா டிசம்பர் 12,2011

தேஜோமண்டல மத்யகம் த்ரிணயனம் திவ்யாம் பராலங்க்ருதம்தேவம் புஷ்ப ஸரேக்ஷúகார்முக லஸந் மாணிக்ய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.