பதிவு செய்த நாள்
29
நவ
2017
12:11
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே, வீர மறவன், சதிகல் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி தலைமையிலான ஆய்வுக் குழுவினர் மற்றும் வாணியம்பாடி மருதர்கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியைகள் மகேஸ்வரி, ஜோதிலட்சுமி, காமினி மற்றும் சித்த வைத்தியர் சீனிவாசன், இமயம் கல்லூரி சரவணன், ஆசிரியர் பாபு, குமரேசன் ஆகியோர் கொண்ட குழுவினர், வாணியம்பாடி அடுத்த விண்ணமங்கலத்தில் சோழர் மற்றும் விஜயநகர காலத்தை சேர்ந்த மூன்று நடுகற்களை கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து, பேராசிரியர் மோகன்காந்தி, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வாணியம்பாடியில் இருந்து, ஆம்பூர் செல்லும் சாலையில், விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையோரம், அபத்தீஸ்வரர் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட நடுகல்லில், ஒரு வீரன் வேண்டுதலுக்கு தன் தலையையே வெட்டி பலி கொடுப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, பராந்தக சோழர் காலத்திய நடுகல். ஊரின் நுழைவு வாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு நடுகல், திறந்த வெளியில் கேட்பாற்று கிடந்தது. இதில், எழுத்துகள் எதுவும் இல்லை. இது பிற்கால சோழர் காலத்தை சேர்ந்தது. வீரன் தலையை வாரி கொண்டையிட்டுள்ளான். வலது கையில் நீண்ட வாள் உள்ளது. இடது கையில் வில் உள்ளது. இடது தோள் பட்டையில் அம்பு பாய்ந்துள்ளது. இடது காலின் ஓரத்தில் பசு மாட்டின் சிற்பம் உள்ளது. வலது கையின் மேற்புறம் மூன்று மனிதர்களின் சிற்பம் உள்ளது. இது வீரனை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் காட்சியாகும். ஊரில் உள்ள பசுவை பகைவர்கள் திருடிச் செல்லும் போது, அவர்களை எதிர்த்து போரிட்டு அம்பு பாய்ந்து இறந்த வீர மறவனுக்காக, இந்த நடுகல் வைக்கப்பட்டுள்ளது. அபத்தீஸ்வரர் பெருமாள் கோவிலில் வலது புறம் கண்டறியப்பட்ட, மூன்றாவது நடுகல் விஜயநகர பேரரசு காலத்தை சேர்ந்தது. இந்த நடுகல் சதிகல் ஆகும். கணவன் வீரமரணம் அடைந்த பிறகு, மனைவி கணவனுடன் சேர்ந்து, உடன் கட்டை ஏறி உயிரை விட்ட செய்தியை நடுகல் கூறுகிறது. இந்த மூன்று நடுகற்கள், விண்ணமங்கலத்தில் பழமையை பறைசாற்றி நிற்கிறது. நடுகற்களை தொல்பொருள் ஆய்வுத்துறையினர் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.