பதிவு செய்த நாள்
29
நவ
2017
12:11
சேலம்: சேலத்தில், கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, விளக்குகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. கார்த்திகை தீபத்திருவிழா டிச., 2ல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, விளக்குவைத்து மக்கள் வழிபாடு நடத்துவர். பண்டிகைக்கு குறைவான நாட்களே இருப்பதால், மாநகரில் பல்வேறு இடங்களில், கார்த்திகை விளக்குகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. சின்னக்கடை வீதி, அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, அம்மாபேட்டை ஆகிய இடங்களில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜ விளக்கு, அடுக்கு விளக்கு, லட்சுமி விளக்கு என பல்வேறு வடிவங்கள் உள்ளன. 30 ரூபாயில் இருந்து, 250 ரூபாய் வரை விளக்குகள் விற்கப்படுகின்றன.
இதுகுறித்து, கார்த்திகை விளக்கு வியாபாரி கார்த்திக் கூறியதாவது: சேலத்தை பொறுத்தவரை, 85க்கும் மேற்பட்ட இடங்களில் கடைகள் உள்ளன. 50 லட்சம் விளக்குகள் விற்பனையாகும் என, எதிர்பார்க்கிறோம். மேற்கு வங்க மாநிலம், ராஜஸ்தானில் இருந்து அதிகப்படியான விளக்குகள் வரத்தாகி உள்ளன. சேலம் மாவட்டம், கஞ்சநாயக்கன்பட்டியில் தயாரிக்கப்படும் விளக்குகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.