பதிவு செய்த நாள்
29
நவ
2017
12:11
தலைவாசல்: தலைவாசல் அருகே, பழமைவாய்ந்த சிவாலயம், சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ளது.
தலைவாசலில், பழமையான சிவாலயங்கள் ஏராளமாக உள்ளன. மணிவிழுந்தான் தெற்கு ஊராட்சியில், 2000 ஆண்டு களுக்கு மேல், பழமை வாய்ந்த மணிகண்டேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலை, மன்னர் வானகோவராயன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. குடைவரை கோவில் வடிவத்தை கொண்ட இது, பாண்டியர் கால கட்டட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. கோவிலின் மூலவரான மணிகண்டேஸ்வரர், இரண்டு அடி உயரத்தில், லிங்க வடிவில் அருள் பாலிக்கிறார். கோவில் உள்ளே நுழைந்ததும், இரண்டு அடி உயரத்தில், ஒரே கல்லால் ஆன நந்தி சிலை உள்ளது. இதன் கழுத்தில் மணி, சலங்கை போன்றவை, கற்களிலேயே செதுக்கப்பட்டுள்ளது. கோவில் உட்புறத்தின் மேல்பகுதி கூம்பு வடிவத்திலும், சுற்றுப்புறச் சுவர்கள் நட்சத்திர வடிவிலும் உள்ளது. பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில், சிவனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இத்தலத்தில் தொடர் வழிபாடு செய்து வர, திருமணத் தடை, குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு, தொழில் மேன்மை உள்ளிட்ட பிரச்னைகள் நிவர்த்தியாகும் என ஐதீகம். சிறப்பு வாய்ந்த இக்கோவில், சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால், சிலைகள், சித்திர வேலைப்பாடுகள் அரிக்கப்பட்டு, எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது. மூலவரின் உடனுறையான மணிகண்டேஸ்வரி அம்மன் ஆலயம், இடியும் நிலையில் இருந்ததால், பாதுகாப்பு கருதி அருகில் உள்ள மணியம்மை கோவிலில், அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிதிலமடைந்த நிலையில் உள்ள கோவிலை புதுப்பிக்க, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.