பதிவு செய்த நாள்
14
டிச
2011
11:12
ஆத்தூர்: ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில், பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில், கார்த்திகை மாத கடைசி சோமாவாரத்தையொட்டி, 108 வலம்புரி சங்குகளில், அபிஷேக சிறப்பு பூஜை நடந்தது. கார்த்திகை மாதத்தில், சிவபெருமான் "அக்னியாக காட்சி தருகிறார். அதனால், கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்கள் கிழமையும் (சோமவாரம்), இறைவனை குளிர்விப்பதற்காக வலம்புரி சங்குகளால் அபிஷேக பூஜை நடத்தப்பட்டுகிறது.நேற்று முன்தினம் கடைசி சோம வாரம் என்பதால், ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்பவமூர்த்தீஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், வீரகனூர் கங்காசவுந்தரேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், 108 வலம்புரி சங்குகளால் மூலிகை அபிஷேகம் செய்யப்பட்டது.தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வருக்கு, 16 வகையான மூலிகை அபிஷேகங்களால் பூஜை செய்தனர். பின், சர்வ சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த பூஜையில், ஆத்தூர், தலைவாசல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.