பாபநாசம்: பாபநாசம் அருகே சுந்தரபெருமாள்கோவில் அறம்வளர்த்த நாயகி உடனாய ஐயாறப்பர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடக்கிறது.நன்செயும், புன்செயும் கொஞ்சிக்குலமிடும் தஞ்சை தரணியில் பார்க்குமிடம் எங்கும் நீக்கமற நிறைந்து தோன்றும் பக்தி நலமிக்க சிவன்கோவில்கள் நிறைந்து குடந்தை பகுதியில் காணப்படும்.அதன்படி, திருவலஞ்சுழி, பட்டிஸ்வரம், திருநல்லூர், திருப்பாலத்துறை, திருவைகாவூர் முதலான ஐந்து தேவாரத்தலங்களால் சூழப்பெற்று காவிரி, அரசலாறு, திருமலைராஜன், முடிக்கொண்டான், குடமுருட்டி முதலான ஐந்து ஆறுகள் சுந்தரபெருமாள்கோவில் பகுதியில் பாய்ந்து வளம்செய்கிறது. திருமலைராஜன் ஆற்றின் வடகரையில் அருள்பாவித்துவரும் அறம்வளர்த்த நாயகி உடனாய ஐயாறப்பர் கோவில் கும்பாபிஷேகம் இன்று புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 க்குள் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அஸ்டபந்தனம், கலசபிரதிஷ்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று இரவு பஞ்சமூர்த்தி விதியுலாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருச்சிற்றம்பலம் மற்றும் கிராமவாசிகள் செய்துவருகின்றனர்.