சிவகங்கை, சிவகங்கை அருகே திருமலையில் டிச., 2 ல் கார்த்திகை மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. தெருவிளக்கு எரியாததால் கிரிவலப்பாதை இருட்டாக உள்ளது. திருமலையில் மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் உள்ளது. கோயில் அமைந்துள்ள மலையில் ஆயிரம் அடி உயரத்தில் ஆண்டுதோறும் கார்த்திகையில் பவுணர்மி அன்று கிரிவலம் சென்று மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கும். சிவகங்கை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இதற்காக மலையை சுற்றி 3 கி.மீ., க்கு கிரிவலப்பாதை அமைக்கப்பட்டது. பக்தர்கள் கோரிக்கையை ஏற்று 2014 ல் கிரிவலப் பாதையில் 26 லட்சம் ரூபாயில் 35 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. தற்போது 15 க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் கிரிவலப்பாதை முழுவதும் இருட்டாக உள்ளது. இந்த ஆண்டு டிச., 2 ல் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையடுத்து கிரிவலப்பாதை தெருவிளக்குகளை பழுதுநீக்க வலியுறுத்தி பக்தர்கள் சிவகங்கை கலெக்டர் லதா ’வாட்ஸ்ஆப்பிற்கு’ புகார் அனுப்பினர். அவரது உத்தரவில் ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகள் தினதினங்களுக்கு முன் பார்வையிட்டு சென்றனர். அதன்பின் எந்த நடவடிக்கையும் இல்லை. பக்தர்கள் கூறுகையில், ’தீபம் மாலை 6:00 மணிக்கு ஏற்றப்படும். இதனால் தெருவிளக்குகள் அவசியம். மகா தீபத்திற்கு சில தினங்களே உள்ளன. அதற்குள் தெருவிளக்குகளை பழுநீக்கம் செய்ய வேண்டும்,’ என்றனர்.