பதிவு செய்த நாள்
30
நவ
2017
12:11
போடி, போடி ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. போடியில் தாய்ஸ்தலம் ஸ்ரீமது ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில் அமைந்துள்ளது. முழுவதும் கருங்கற்களால் சிற்ப வேலைகள் செய்யப்பட்டு, 1850ல் தேவாங்கர் சமுதாயத்தால் உருவாக்கப்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும். இங்குள்ள சவுடேஸ்வரி அம்மன் சிலை 12 அமாவாசை விரதம் இருந்து வடிவமைக்கப்பட்டதாகும். அம்மனின் வலது பக்கத்தில் லிங்கம் உள்ளதால் ஸ்ரீமது ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் என அழைக்கப்படுகிறது. வடக்கு நோக்கி அமைந்துள்ள அம்மனை வணங்கினால் குழந்தை பாக்கியம் உண்டாகும். அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோயில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பின் நாளை நடக்கிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று விக்னேஷ்வர பூஜை, தீர்த்தம் கொண்டு வருதல், நவக்கிரக ஹோமம் நடந்தது. இன்று நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, யாககுண்டல ஹோமமும், மதியம் 3:00 மணிக்கு தேவாங்கர் குல ஜெகத்குரு தயானந்தபுரி சுவாமிகளுக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பும் நடக்கிறது. நாளை காலை 7:35 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் பவுன்தாசன், பொருளாளர் குமரேசன், உபதலைவர் தேவநாதன், இணை செயலாளர் பிரசாத் மற்றும் திருப்பணி கமிட்டி நிர்வாகிகள், வாலிபர் சங்கம், மாதர்சங்கம், அன்னதான குழுவினர் செய்து வருகின்றனர்.