பதிவு செய்த நாள்
30
நவ
2017
01:11
திருவண்ணாமலை: ”திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில், மஹா தீபத்தை காண, முதல் முறையாக, ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது,” என, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில், டிச.,2ல், அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளன. அந்த நேரத்தில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கோவில் தங்க கொடி மரம் எதிரில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து, மலை உச்சியில் மஹா தீபத்தை கண்டு ரசிப்பார். இந்த அரிய தரிசனத்தை காண, லட்சக்கணக்கான பக்தர்கள் போட்டி போடுவர். கோவில் வளாகத்தில், 7,000 பேர் மட்டுமே அமரக்கூடிய இட வசதி உள்ளதால், அமைச்சர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள், கட்டளைதாரர்கள், 2,000 போலீசார் மட்டும் அனுமதிக்கப்படுவர். இதில் சாதாரண பக்தர்கள் அனுமதிப்பதில்லை என, குற்றச்சாட்டு எழுந்ததால், பரணி மற்றும் மஹா தீபம் காண, 500 ரூபாய் கட்டண தரிசனத்தில், 1,000 பேரும், 600 ரூபாய் கட்டண தரிசனத்தில், 100 பேரும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த டிக்கெட்டை, கடந்த சில ஆண்டுகளாக, கோவில் ஊழியர்கள் பிளாக்கில் விற்பனை செய்து வந்தததால், பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, இந்த ஆண்டு, ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய, கலெக்டர் கந்தசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தீப திருவிழாவில், பரணி மற்றும் மஹா தீபத்தை காண்பதற்கான டிக்கெட், ஆன் லைன் மூலம், இன்று காலை, 6:00 மணிக்கு துவக்க உள்ளது. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில், ஆதார் எண் கட்டாயம் குறிப்பிட வேண்டும், தீதீதீ.tணtஞுட்ணீடூஞு.ணிணூஞ் மற்றும் தீதீதீ.ச்ணூதணச்ஞிடச்டூஞுண்தீச்ணூச்ணூ tஞுட்ணீடூஞு.tணடணூஞிஞு.டிண என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.