பதிவு செய்த நாள்
02
டிச
2017
11:12
நாமக்கல்: நாமக்கல், நரசிம்மர் சுவாமி கோவில் தேர் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்து, வெள்ளோட்டத்திற்கு தயாராக உள்ளது. நாமக்கல், நரசிம்மர் கோவிலுக்கு சொந்தமான தேர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்தது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தேரை புதுப்பிக்க முடிவு செய்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், தேர் பிரிக்கப்பட்டு, பணி துவங்கியது. இருப்பினும் திட்ட மதிப்பீடு தயார் செய்வதில், காலதாமதம் ஏற்பட்டதால், அப்பணி மந்தமாகவே நடந்தது. இரண்டு ஆண்டுகளாக, தேர் இழுக்கப்படவில்லை. ஆறு மாதங்களுக்கு முன், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, 25 லட்சம் ரூபாய் மதிப்பில், தேரை புதுப்பிக்கும் பணிகள் துவங்கின. தேவையான நிதியை உபயதாரர் மூலம் பெற்று, திருவண்ணாமலையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள், 10 பேர் குழுவால், அதிகாரிகள் மேற்பார்வையில், சிற்பங்கள் மற்றும் தேர்கட்டும் பணி நடந்தது. தற்போது, பணி நிறைவடைந்து, புதுப்பொலிவுடன் தேர் காணப்படுகிறது. வரும் பங்குனி மாத தேர்த் திருவிழாவில், தேரோட்டம் நடக்கிறது. ஜனவரி, 21ல் தேர் வெள்ளோட்டம் நடத்த, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.