பதிவு செய்த நாள்
15
டிச
2011
10:12
சபரிமலை : மண்டல பூஜை ஐயப்ப தரிசனத்திற்காக, சபரிமலையில் பக்தர்கள், 17 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. 12ம் தேதி இரவு, பம்பையில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், 17 மணிநேரம் காத்திருந்த பின்னரே, சுவாமியை தரிசிக்க முடிந்தது. இரவு, பகல் என உண்ணாமல், உறங்காமல் மலையில் காத்து கிடந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்ததை ஒட்டி, பம்பையில் இருந்து சன்னிதானம் வரை, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் வரிசை நீண்டு கொண்டே போனதால், பம்பையில் பக்தர்கள் பல மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட்டனர். பிரசாதம் வழங்குவதில் சிக்கல்: முக்கிய பிரசாதங்களான, அரவணை, அப்பம் போன்றவற்றை பக்தர்கள் எளிதாகவும், விரைவாகவும் பெறுவதற்கு வசதியாக, திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு சிறப்பு கவுன்டர்களை திறந்துள்ளது. அங்கு, நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருப்பதைத் தவிர்க்க, தனலட்சுமி வங்கிக் கிளைகள் எங்கிருந்தாலும், அங்கிருந்து தேவையான பிரசாதங்களுக்கு முன்கூட்டியே பணத்தை செலுத்தி, கூப்பன் பெற்றுக் கொள்ளலாம். அதை, சபரிமலையில் செயல்படும் ப்ரீபெய்டு பிரசாத கவுன்டர்களில் கொடுத்து, பிரசாதங்களை பெறும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. ஆனால், கூப்பன்களில் உள்ள எண்ணிக்கைக்கு ஏற்ப, பிரசாதங்கள் வழங்குவதில்லை என, பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். நெரிசல் காரணமாக, அங்கு பக்தர்கள் வங்கி கூப்பனை கொடுத்து, பிரசாதங்களை எண்ணி வாங்க முடியாத நிலையால், இப்பிரச்னை ஏற்படுகிறது. இதனால், அங்குள்ள ஊழியர்களிடம் பக்தர்கள் வாக்குவாதம் செய்யும் நிலையும் உள்ளது. "அரவணை பிரசாதம் எண்ணிக்கையில் தவறு ஏற்படுவதை தடுக்க, டின்களை எண்ணும் கருவியைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சிரமம் பாராமல், பக்தர்கள் அந்தந்த கவுன்டர்களிலேயே, பிரசாத டின்கள் சரியாக உள்ளதா, என எண்ணி பார்த்து வாங்கவேண்டும் என, வங்கி அதிகாரியொருவர் தெரிவித்தார்.