பதிவு செய்த நாள்
15
டிச
2011
10:12
அன்பு மற்றும் அமைதியை ஆயுதமாகக் கொண்டு அனைவரிடத்திலும் நட்புணர்வு, நல்லெண்ணங்களை நிலைநிறுத்த வேண்டுமென்பதே, ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமையாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக அமைந் துள்ளது புனித செபஸ்தியாரின் வாழ்க்கை. இளம் வயதில், போர்ப்படை தளபதியாக பொறுப்பேற்று ரோமாபுரியை பாதுகாத்த செபஸ்தியார், ஓய்வு நேரத்தை மறைபரப்பும் பணிக்காக செலவிட்டார். சிறைக்கைதிகளை சந்தித்து அவர்களைத் தழுவி, ""விடுதலைக்காற்றை நீங்கள் சுவாசிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை, என்று கூறி ஆறுதல் அளிப்பார். இவரது பரிவினால் நெகிழ்ந்து போன கைதிகள், இயேசு கிறிஸ்துவை வாழ்த்திப்பாடி பொழுதை கழித்தனர். இதை கேள்விப்பட்டான் பேரரசன் தியோக்கிளேசியன். கிறிஸ்தவர்களை வேரோடு வெட்டி சாய்த்துக்கொண்டிருந்த அவனுக்கு, தனது தளபதி, அவர்களை சார்ந்தவர் என்பது வேப்பங்காயாக கசந்தது. செபஸ்தியார் தளபதியாக இருந்து தனக்கு செய்த சேவைகளை மறந்தான். அவருக்கு மரணதண்டனை விதித்து, தனது கண்முன் நிறைவேற்றுமாறு ஆணையிட்டான்.
வேதசாட்சியாக உயிர்நீக்கப்போவதை நினைத்து அவர் ஆனந்தமடைந்தார். அரண்மனை தூண்களில் பிணைக்கப்பட்ட செபஸ்தியாரின் உடல்மீது அம்புகள் எய்யப்பட்டன. குற்றுயிராய் கிடந்த அவரை மீட்ட பணிப்பெண், அவரது காயங்களுக்கு மருந்திட்டு காப்பாற்றினாள். மீண்டும் மன்னரை சந்தித்த செபஸ்தியார், இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுமாறு மன்றாடினார். இறந்துவிட்டதாக நினைத்த தளபதி, மீண்டும் உயிருடன் வந்ததோடு தனக்கு உபதேசமும் அளித்தது கண்டு வெகுண்ட மன்னன், தடியால் அடித்து அவரைக் கொன்றான். பிரான்சில் பிறந்து, இத்தாலியில் வளர்ந்து, சோதனைகளை சாதனையாக்கி, இயேசுவுக்காக உயிர் துறந்த செபஸ்தியார், புனிதர்களின் வரிசையில் இடம்பிடித்தார். துயரத்தில் துடிப்பவர்களுக்கு துணை நிற்பவராகவும், போர்ப்படை வீரர்களின் பாதுகாவலராகவும் திகழ்கிறார். ஏழை, எளியவர், கைவிடப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், சமுதாயத்தில் தாழ்நிலைக்கு தள்ளப்பட்டோர் இவர்களுக்கு உதவாத எந்த இதயமும், இயேசுவுக்கு ஏற்புடையதல்ல என்பதை மனதில் கொண்டு, ""இறைவா, நான் தன்னலம் துறக்கவும், ஆன்மாவின் குரலுக்கு செவிமடுக்கவும் அருள்தாரும், என இறைஞ்சுவோம்.