பதிவு செய்த நாள்
15
டிச
2011
11:12
பழநி : பொலிவு மாறாத நவீன (சிந்தெடிக், பைபர்) சுவாமி படங்கள், பழநியில் தயாரிக்கப்படுகின்றன. சிந்தனையைத் தூண்டுவதில் ஓவியங்கள் பிரதானமாக உள்ளன. ஓவியங்களின் பரிணாம வளர்ச்சியான போட்டோ, படங்கள் அனைத்து வீடுகளையும் ஆக்கிரமித்துள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியால் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், லித்தோ, ஆயில் பிரின்ட் என பல நிலைகளை எட்டியுள்ளன.தற்போது "சிந்தெடிக், "பைபர் படங்கள் வந்துள்ளன. கண்ணாடி "பிரேம் தோற்றத்துடன், இயற்கை பாதிப்புகள் மற்றும் தவறி விழுந்தாலும் சேதம் அடையாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. பழநி கோயிலுக்கு வருவோர், இவ்வகை சுவாமி படங்களை வாங்கிச் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது, ஐயப்ப பக்தர்கள் வருகை மூலம் "சீசன் களைகட்டியுள்ளது. எனவே படங்களின் தேவை அதிகரிப்பால், இவற்றின் தயாரிப்பு மும்முரமாக நடக்கிறது. பழநியில் 15 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ள முருகேசன், 48, கூறியது:கண்ணாடி, தகர "பிரேம் களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட படங்களின் காலம் மலையேறி விட்டது. லேமினேஷன் செய்யப்படும் படங்களிலும், குறிப்பிட்ட காலத்திற்குப் பின் மங்குதல், சுருக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே படங்களின் மீது பாலிதீன் பசை (பாலியஸ்டர் ரெசின்) பூசப்படுகிறது. படங்கள் பாதிப்பை தவிர்க்க, பி.வி.ஐ., (பாலிவினைல்) பசை தடவி உலர்த்தப்படுகிறது. இப்படங்கள் பல ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும். ரூ. 10 முதல் 250 வரை விற்கப்படுகிறது, என்றார்.