சபரிமலை இரவுநேர பயணம்: பக்தர்களுக்கு எச்சரிக்கை .. யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2017 12:12
சபரிமலை: சபரிமலை வனப்பகுதியில் இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் சிறிய வாகனங்களில் பயணம் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பக்தர்களுக்கு போலீஸ்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
பத்தணந்திட்டை - பம்பை ரோட்டிலும், எருமேலி-பம்பை ரோட்டிலும் அடர்ந்த காடுகள் வழியாக ரோடு அமைக்கப்பட்டுஉள்ளது. இதில் பல பகுதிகளில் காட்டு யானைகள் சர்வ சாதாரணமாக ரோடுகளை கடந்து செல்லும். இரவு நேரத்தில் கூட்டமாக வரும் யானைகள் நீண்ட நேரம் ரோட்டில் நிற்பதும் உண்டு. இந்த நேரத்தில் பெரிய பஸ்கள் வந்தால் பஸ்சை நிறுத்தி விட்டு சிறிய வெளிச்சத்தில் உள்ள விளக்குகளை எரிய விடுவர். சிறிது நேரத்தில் யானை சென்று விடும்.
தாக்குதல் : ஆனால் ஆட்டோ, பைக் போன்ற வாகனங்களில் வருபவர்களை யானைகள் பதம் பார்த்து விடும். பம்பை ரோட்டில் மண்ணாறகுளத்தி முதல் சாலக்காயம் வரையிலும் யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது.
ஆட்டோ, டூவீலர்கள் தவிர்க்கவும் : எனவே இரவு நேரத்தில் சிறிய வாகனங்களில் வரும் பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். யானைகள் கடக்கும் பகுதி என்ற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்ட இடத்தில் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். முடிந்த அளவு ஆட்டோ, டூவீலர் போன்ற வாகனங்களில் இரவு நேரத்தில் வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்று போலீஸ் துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சபரிமலை காடுகளில் புலிகளின் நடமாட்டம் பதிவாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பம்பையில் உள்ள கேமராவிலும் புலி பதிவாகியிருந்தது.