பதிவு செய்த நாள்
08
டிச
2017
12:12
ராமநாதபுரம்: காசியில் இருந்து, சபரிமலை வரை, 3,600 கி.மீ., நடை பயணமாக செல்லும் கேரள மாநில அய்யப்ப பக்தருக்கு, ராமநாதபுரம் ரகுநாதபுரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரளா மாநிலம், பாலக்காடு அருகே திருநல்லையைச் சேர்ந்தவர் அனந்த பத்மநாபன், 57; இவர், 24 ஆண்டுகளாக, சபரிமலைக்கு நடை பயணமாக சென்று வருகிறார். தற்போது, காசியில் இருந்து, நடை பயணமாக செப்., 5ல் புறப்பட்டுள்ளார். அங்கிருந்து, ராமேஸ்வரத்திற்கு நடை பயணமாக வந்து, சுவாமி தரிசனம் செய்தார். ராமநாதபுரம் அருகே ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில், அனந்த பத்மநாபனுக்கு, தலைமை குருக்கள் மோகன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அனந்த பத்மநாபன் கூறியதாவது: கடந்த, 24 ஆண்டுகளாக, சபரிமலை சென்று வருகிறேன். இந்தாண்டு, காசியில் இருந்து, 3,600 கி.மீ., நடை பயணமாக செல்ல முடிவு செய்தேன். இதன்படி செப்., 5ல் புறப்பட்டு, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா வழியாக, சென்னை வந்து, ராமேஸ்வரம் வந்துள்ளேன். இங்கிருந்து, சபரிமலைக்கு செல்கிறேன். ஜன., 12ல் சபரிமலையை அடைவேன். வழியில் சந்திக்கும் அய்யப்ப பக்தர்களிடம், பிளாஸ்டிக் இல்லாத இருமுடியுடன் வருகை தர வலியுறுத்தி வருகிறேன். மக்கள் அமைதிக்காகவும், பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல், இயற்கையை பாதுகாக்கவும் வலியுறுத்தி வருகிறேன். தினமும் வனப்பகுதிகளில், 20 கி.மீ., மற்ற பகுதிகளில், 40 கி.மீ., வரை நடப்பேன். வழியில், வன விலங்குகள் கண்களில் பட்டுள்ளது. ஆனால், எந்த இடையூறும் ஏற்படுத்தியதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.