பதிவு செய்த நாள்
16
டிச
2011
10:12
முதல் நூற்றாண்டு, தனது முத்திரையை வரலாற்று ஏடுகளில் அழுத்தமாக பதிக்க துவங்கியிருந்த காலம் அது... இயற்கை எழிலின் பிறப்பிடமான கேரளாவின், அழகிய மலபார் நதிக்கரையில், சிலர் தண்ணீரை மேல்நோக்கி தெளித்து உதடுகளில் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த ஒரு சந்நியாசி, தானும் அதுபோல செய்து கண்களை மூடி ஜெபித்தார். மற்றவர்கள் தெளித்த தண்ணீர் கீழே விழுந்து நதியில் கலந்தது. இவர் தெளித்த தண்ணீர் அந்தரத்தில் அப்படியே நின்றது.
அவர் தினமும் இப்படி செய்யவே, இந்த அதிசயத்தை பார்க்க மக்கள் ஆற்றங்கரையில் திரண்டனர். இந்த தகவல் பார்த்திய மன்னன் கோண்டபறேஸ்சின் கவனத்திற்கு சென்றது. சந்நியாசியை வரவழைத்த மன்னன் அவர் யார் என்று விசாரித்தான். இயேசுவின் சீடர்களில் ஒருவரான தோமையார் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த சந்நியாசி, அன்பு, அமைதி, சமாதானத்தை போதிக்க வந்திருப்பதாகவும், அதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
தோமையாரின் எளிமையான பேச்சினால் வசீகரிக்கப்பட்ட மன்னன், அவருக்கு எல்லா உதவிகளையும் செய்ததுடன், அவரின் போதனையை தானும் கடைபிடித்து தனது குடும்பத்தினரையும் அதில் பங்குபெறச்செய்தான். மலபாரிலிருந்து மயிலாப்பூருக்கு இடம்பெயர்ந்த தோமையார் அங்கும் அதே பணியை செய்தபோது, அப்பகுதி மன்னன் அனுப்பிய காவலர்களால் கொல்லப் பட்டார். சென்னையில், இவர் புதைக்கப்பட்ட இடத்தில் எழுப்பப்பட்ட பேராலயத்திற்கு "புனித சாந்தோம் என்று பெயரிடப்பட்டது.
இந்தியாவின் அப்போஸ்தலர் என்று அனைத்து தரப்பினராலும் அன்புடன் அழைக்கப்பட்ட புனித தோமையார், இயேசுவின் சீடர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்பட்டார். இவர் மூலமாகத்தான் இயேசுவிடமிருந்து வெளிப்பட்ட அற்புதமான சில வார்த்தைகள் உலகில் நிலைநிறுத்தப்பட்டது. ""உயிரும், உண்மையும், வழியும் நானே. என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான், என்று தனது இறுதி உணவின்போது தோமையாரிடம் கூறிய இயேசு, உயிர்த்தபின்பு அதே தோமையாருக்கு காட்சி அளித்தார்.
என்னைக்கண்டதால் விசுவாசம் கொண்டாய். காணாமல் விசுவாசிப்பவர்கள் பேறு பெற்றவர்கள், என்ற வார்த்தைகளை கூறி ஆசிர்வதித்தார். தோமையார் செய்த தியாகம் போல், இயேசுவை நம் இதயத்தில் சுமந்துகொண்டு, நமது வாழ்வை மற்றவர் நலனுக்காக அர்ப்பணிப்போம். தியாகத்தின் வாசம் நம் வாழ்வெல்லாம் கலந்து மணம் வீசட்டும்.