பதிவு செய்த நாள்
16
டிச
2011
11:12
திருவாரூர்: உலக பிரசித்தி பெற்ற பொங்கு சனீஸ்வரர் என்று அழைக்கப்படும் அக்னீஸ்வரர் கோவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுக்கா, கீராலத்தூர் பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சனிப்பெயர்ச்சி வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி விழாவினை சிறப்பாக நடத்துதல் குறித்து இரண்டாவது ஆலோசனை கூட்டம் திருவாரூர் கலெக்டரக கூட்ட அரங்கில் கலெக்டர் முனியநாதன் தலைமையில் நடந்தது. விழா நடைபெறும் நாட்களில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உட்பட அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தருவது. சிறப்பு அன்னதானம் வழங்குவது. விழா நாட்களில் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்குவது. கூடுதல் பஸ் இயக்கி, நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைப்பது. கோவிலுக்குச் செல்ல ஏதுவாக மாவட்டம் முழுவதும் வழிகாட்டி பலகைகள் வைத்திடவும் உரிய அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது: கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவிற்கு பக்தர்கள் வெளி நாடுகளிலிருந்தும், வெளி மாநிலத்திலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பெருந்திரளாக பக்தர்கள் வருவார்கள். எனவே, அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளும், அடிப்படைகளும் செய்யப்பட்டு விழா சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கோவிலின் பிரசித்தி பெற்ற பிரசாதமான வினை தீர்க்கும் மற்றும் செல்வம் கொழிக்கும் கருப்பு எள் உருண்டை கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக எளிதில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக ஆங்காங்கே வழிகாட்டிப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. திருக்கோயில் தகவல் குறித்தும் தகவல் சிற்றேடுகள் மற்றும் குறிப்புகள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.