சில கடினமான விஷயங்கள் நடைபெற வேண்டுமே என பக்தர்கள் அனுமனுக்கு வேண்டிக் கொண்டு வெற்றிலை மாலை சாத்துவது என்னும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அசோகவனத்தில் அனுமன் சீதையைக் கண்டு வணங்கி, தான் ராமனின் தூதன் என்று எடுத்துரைத்தார். சீதையை நம்ப வைக்க அண்ணலின் கணையாழியைக் காட்டினார். பெரிதும் மனம் மகிழ்ந்த சீதை, மாருதிக்கு ஆசிர்வாதம் செய்ய நினைத்தார். பெரியவர்கள் ஆசிர்வாதம் செய்யும் போது அட்சதை அல்லது மலர்களைத் தூவி வாழ்த்துவது வழக்கம். ஆனால் அசோக வனத்தில் அவை ஒன்றுமே இல்லை. அதனால் சீதாபிராட்டியார் பக்கத்தில் படர்ந்திருந்த வெற்றிலைக் கொடியின் இலைகளைக் கிள்ளி, இந்த இலையினால் நான் உன்னை ஆசீர்வாதம் செய்கிறேன்! நீ என்றென்றும் சிரஞ்சீவியாக இருப்பாயாக! இந்த இலை உனக்கு வெற்றியைத் தரும். அதனால் இன்று முதல் இதன் பெயர் வெற்றி இலை - அதாவது வெற்றிலை என்று மக்களால் அழைக்கப்படும் என்று கூறி வாழ்த்தினார். அதனால் வெற்றிலை மாலை அணிவித்தால் அனுமன் மகிழ்ந்து நாம் கேட்டவற்றை நிறைவேற்றி வைப்பார்; காரியத்தில் நமக்கு வெற்றியைத் தேடித் தருவார் என்ற ஐதிகம் நிலவுகிறது.