பதிவு செய்த நாள்
16
டிச
2011
11:12
நகரி : திருப்பதியில் மூலவர் வெங்கடேசபெருமாளை அருகிலிருந்து தரிசிக்கும் நடைமுறையை ரத்து செய்ய, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. தற்போது வாரநாட்களில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் புதன்கிழமை நள்ளிரவு வரை பக்தர்கள், மூலவரை மூன்றாவது வாயிற்படி அருகிலிருந்து தரிசிக்கும் நடைமுறைக்கு (லகு தரிசனம்) அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், அருகிலிருந்து தரிசிக்கும் நடைமுறை மூலம் நாள் ஒன்றுக்கு, 40 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனம் செய்யமுடிகிறது. இந்த இரு நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து விடுவதால், செவ்வாய், புதன்கிழமைகளில் சில நேரங்களில் பக்தர் கூட்டத்திற்கு தகுந்தபடி இரவு நேரத்தில் தொலைதூர (மகாலகு) தரிசனம் அமல்படுத்தப்படுகிறது, இதுபோன்ற நாட்களில், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்று செல்லும் பக்தர்கள், நான்கு முதல், ஆறு மணி நேரம் வரையும், இலவச கியூவில் செல்லும் பக்தர்களும் தரிசனத்திற்காக, பன்னிரண்டு முதல், பதினைந்து மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. மூலவரை அருகிலிருந்து தரிசனம் செய்யும் நடைமுறையை ரத்து செய்து விட்டால், கியூ வரிசையில் நீண்டநேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு, துரித நேரத்தில் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆலோசனையின் பேரில் இந்த நடைமுறையை தற்போது செவ்வாய்கிழமை அன்று பகல் நேரத்தில் இரண்டு மணி நேரமும், புதன்கிழமைகளில் காலை, 11 மணி வரை மட்டுமே முதல் கட்டமாக அமல்படுத்தப்பட்டது. இந்த நடைமுறையை திடீரென ரத்து செய்து விடாமல், இதற்கான நேரத்தை படிப்படியாக குறைத்து முற்றிலுமாக ரத்து செய்து விட தேவஸ்தான நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.