பதிவு செய்த நாள்
16
டிச
2011
11:12
கோவில்பட்டி : கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை நாட்கால் நடும் விழா நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களிலும் வரலாற்று சிறப்பு மிக்க பழமையும் பெருமையும் வாய்ந்த கோயில்களில் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசாமி கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் தொடர்ந்து வருஷாபிஷேகம் நடந்து வந்ததை தொடர்ந்து கடந்த 1999ம் ஆண்டு ஆண்டு திருப்பணி வேலைகள் துவக்கப்பட்டு அருள்மிகு பூவனநாதசாமி சன்னதி முன்பு ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் மற்றும் செண்பகவல்லி அம்மன் சன்னதி முன்பு 21 அடி உயரம் உடைய சாலஹார கோபுரம் அமைக்கப்பட்டு மற்றும் பல திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் வரும் ஜனவரி மாதம் 29ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது. கும்பாபிஷேகத்திற்காக கோயில் முன்பு 70 அடி நீளமும், 50 அடி அகலமும் கொண்ட யாகசாலை அமைப்பதற்காக நாட்கால் நடும் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜையும் தொடர்ந்து, கணபதி ஹோமம், கணபதி பூஜை மற்றும் லலிதா சகஸ்ரநாம யாகமும் சிறப்பு பூஜைகளும் நடந்தது. அதனை தொடர்ந்து யாகசாலை பந்தல் அமைக்க நாட்கால் நாட்டப்பட்டது. விழாவில் கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ, கோயில் உதவி ஆணையர் வீரராஜன், நிர்வாக அதிகாரி கசன்காத்த பெருமாள், திருப்பணி குழு தலைவர் நாகஜோதி, உறுப்பினர்கள் ஆறுமுகச்சாமி, கருப்பசாமி, சீனிவாசன், மாரியப்பன், முத்தையா, வேலுச்சாமி, ஜெயராமன், சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயில் டிரஸ்ட் தலைவர் காளிராஜன், யாகசாலை உபயதாரர் சம்பத் கமலாமாரியம்மாள், கம்மவார் சங்க செயலாளர் பால்ராஜ், நாடார் உறவின்முறை சங்க தாழையப்பன், விக்னேஸ்வரன், கோயில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.