பதிவு செய்த நாள்
18
டிச
2017
01:12
நினைத்ததை சாதிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!
சுக்கிரன் டிச. 21ல் தனுசு ராசிக்கு மாறுவதால் நற்பலன்கள் கிடைக்கும். 3-ம் இடத்தில் உள்ள கேது தொடர்ந்து நன்மை தருவார். புதன், ஜன.4ல் தனுசுவிற்கு செல்வதாலும், சூரியன் உங்கள் ராசியில் இருந்து 2-ம் இடத்திற்கு செல்வதாலும். ராசியில் இருக்கும் சனியாலும் நன்மை கிடைக்க வாய்ப்பு குறைவு. சனி, டிச.19ல் உங்கள் ராசியில் இருந்து 2-ம் இடத்திற்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. ஏழரை சனி காலம் இன்னும் மூன்று ஆண்டு தொடரும். சனி 2-ம் இடத்தில் இருக்கும் போது குடும்பத்தில் பிரச்னைகளை உருவாக்குவார்.பொருட்களை இழக்க நேரிடும். வீட்டில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இந்த கால கட்டத்தில் சனி அதிக பளுவை கொடுத்தாலும், அதற்கான பலனையும் தர தயங்க மாட்டார். அவரது 10ம் இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்து உள்ளது. அதன் மூலம் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும்.
சுக்கிரன் மற்றும் கேதுவின் பலத்தால் தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும். நீங்கள் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக் கலாம். மதிப்பு, மரியாதை சிறப்படையும்.
புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். சுக்கிரனால் விருந்து, விழா என சென்று வருவீர்கள். டிச.21க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மதிப்பு, மரியாதை கூடும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்க யோகம் கூடிவரும். சகோதரிகள் உறுதுணையாக இருப்பர். டிச. 16,17 ஜன.12,13ல் அவர்களால் நன்மை அதிகம் கிடைக்கும். பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். டிச. 23,24,25ல் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். ஆனால் ஜன. 8,9ல் அவர்களால் நன்மை ஏற்படும். ஜன.4 வரை அக்கம்பக்கத்தினர் வகையில் பிரச்னை வரலாம்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள் முன்னேற்றம் அடைவர். பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். சூரியனால் செலவு அதிகரிக்கும். டிச.18,19,20, ஜன.10,11ல் சில தடைகள் வரலாம். டிச. 28,29ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.
பணியாளர்கள் தங்கள் பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க கூடாது. அதிகாரி களிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படும். கலைஞர்கள் சுக்கிரனின் பலத்தால் சிறப்படையலாம். புதிய ஒப்பந்தங்கள் எளிதில் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டிஇருக்கும். மாணவர் களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.
போட்டிகளில் வெற்றி காண்பது அரிது. ஆசிரியர்கள் ஆலோசனைப்படி நடந்தால் முன்னேற்றம் கிடைக்கும். விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சிலருக்கு உழைப்புக்கு ஏற்ற வருவாய் கிடைக்காமல் போகலாம். விடாமுயற்சிக்கு தக்க பலன் கிடைக்கும். அதிக முதலீடு செய்ய வேண்டாம். புதிய சொத்து வாங்கும் வண்ணம் கைகூடாமல் போகலாம். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயர் ஏற்படும். உங்களால் குடும்பம் சிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும். சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பெண் காவலர்கள் உயர் பதவி அடைய வாய்ப்பு இருக்கிறது. டிச.30,31 சிறப்பான நாட்களாக அமையும். விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரிகளால் பண உதவி கிடைக்கும். டிச.21,22ல் புத்தாடை, நகை வாங்கலாம்.
* நல்ல நாள்: டிச. 16, 17, 21, 22, 28, 29, 30, 31, ஜன. 5,6,7,8,9,12,13
* கவன நாள்: ஜன.1,2 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 4,8 நிறம்: வெள்ளை, சிவப்பு
* பரிகாரம்:
● சனீஸ்வரருக்கு தீபம் ஏற்றுங்கள்.
● தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
● அம்மன் கோயிலுக்கு சென்று வாருங்கள்.