சிம்மம்: மகம்..: எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதையெல்லாம் சமாளித்து வெற்றி அடையக்கூடிய சக்தி கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் கேது உங்கள் செயல்களில் தடைகளையும் தாமதத்தையும் ஏற்படுத்தலாம். உலகையும் உறவினர்களையும் புரிந்து கொள்வதற்காக உங்களுக்கு நெருக்கடிகளை வழங்கலாம். உங்கள் சுய காலில் நிற்கும் வகையில் உங்களை உருவாக்கலாம். இந்த நேரத்தில் சப்தம ஸ்தானத்தில் ஆட்சி பலம்பெறும் சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்களுக்குள் புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்காலத்தை எண்ணி உங்கள் செயல்கள் இருக்கும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் ஏதாகிலும் ஒரு சச்சரவு நெருக்கடி பிரச்சனை என்று உருவாகலாம் என்றாலும் தக்க சமயத்தில் நண்பர்களால் உங்கள் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படும். கூட்டுத் தொழில் லாபம் அடையும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். டிச. 25 வரை உங்கள தன குடும்பாதிபதி புதன் சாதகமாக சஞ்சரிப்பதால், எதிர்பார்த்த பணம் வரும். எதிர்பார்ப்புடன் மேற்கொள்ளும் வேலைகள் லாபம்தரும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாங்க நினைத்த இடத்தை வாங்கும் அளவிற்கு பணம் இருக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். விவசாயிகள் இந்த நேரத்தில் விளைச்சலில் கவனமாக இருப்பது அவசியம்.
சந்திராஷ்டமம்: டிச. 27
அதிர்ஷ்ட நாள்: டிச. 16, 19, 25, 28. ஜன. 1, 7, 10
பரிகாரம் விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட சங்கடம் விலகும்.
பூரம்: அதிர்ஷ்ட வாய்ப்புகளைத் தேடி நடைபோட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் விழிப்புடன் செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் சகாய ஸ்தானதிபதி சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். வராமல் இருந்த பணம் வரும். உறவினர் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். புதிய வாகனம், நவீன பொருட்கள் என்று வாங்கிடக்கூடிய நிலை உண்டாகும். கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் உருவானாலும் அந்த நிமிடமே அவை சரியாகும். செய்துவரும் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளால் நன்மை அதிகரிக்கும். பெருமை உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். ஒரு சிலர் புதிய சொத்து இடம் என்று வாங்குவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள் தலைமையையும், தொண்டர்களையும் அனுசரித்துச் செல்வது அவசியம். உத்தியோகத்தில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்திடக்கூடிய சக்தி உண்டாகும். சுயதொழில் செய்து வருபவர்கள் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது இந்த நேரத்தில் அவசியம். விவசாயிகள் விளைச்சலில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்வது நன்மையாகும். பெண்கள் கணவருக்கும் குடும்பத்தினருக்கும் தெரியாமல் பிறரிடம் பணம் கொடுப்பதும் முதலீடு செய்வதும் இழப்பிற்கு வழிவகுக்கும். பிரச்சனைகளை உருவாக்கும்.
சந்திராஷ்டமம்: டிச. 28.
அதிர்ஷ்ட நாள்: டிச. 19, 24. ஜன. 1, 6, 10.
பரிகாரம் வடிவுடை அம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
உத்திரம் 1 ம் பாதம்: எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் ராசிநாதன் சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். உங்கள் பாக்யாதிபதி செவ்வாயும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். மாதத்தின் முற்பகுதியிலும் பிற்பகுதியிலும் உங்கள் தன, குடும்பாதிபதியும் லாபாதிபதியுமான புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் இருக்கும். எதிர்பாராத வரவு வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய முயற்சி வெற்றியாகும். கடன் தொல்லை விலகும். சேமிப்பு உயரும். உங்கள் ஜீவனாதிபதி சுக்கிரனும் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். பொன் பொருள் சேரும். இளைய சகோதரர் ஆதரவு கிடைக்கும் என்றாலும், சப்தம ஸ்தானத்தில் சனி ராகு, ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் நிதானம் அவசியம். புதியவர்களை நம்பி எந்தவொரு வேலையிலும் இந்த நேரத்தில் ஈடுபட வேண்டாம். எதிர்பாலினரிடம் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருப்பது நன்மையை உண்டாக்கும். கூட்டுத் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். திருமணம், மறுமணம் போன்ற சிந்தனைகளுக்கு இக்காலத்தில் இடம் கொடுக்க வேண்டாம்.
சந்திராஷ்டமம்: டிச. 28, 29.
அதிர்ஷ்ட நாள்: டிச. 19. ஜன. 1, 10.
பரிகாரம் பாகம்பிரியாளை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.
மேலும்
மார்கழி ராசி பலன் (16.12.2025 முதல் 14.1.2025 வரை) »