பதிவு செய்த நாள்
19
டிச
2017
03:12
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் திருநிறையூர் மற்றும் விளங்குளத்தில் உள்ள மங்களசனீஸ்வரன் கோவில்களில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருநரையூரில் ராமநாதசுவாமி கோவிலில் தனி சன்னதியில் சனீஸ்வர பகவான் தன் குடும்பத்துடன், அனுக்கிரக சனியாக அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் மூலவருக்கு பலி பீடமோ, கொடி மரமோ கிடையாது. ஆனால், சனீஸ்வரருக்கு தனி சன்னதியுடன், பலி பீடமும், கொடி மரமும் உண்டு. சிவன் சன்னதி முன் நந்தி இருப்பது போல், சனீஸ்வரர் சன்னிதி முன் காக வாகனம் இருக்கிறது. சனீஸ்வரன் தன் இரு துணைவியரான மந்தா தேவி, ஜேஷ்டா தேவியுடனும், இவர்களது மகன்களான குளிகன், மாந்தி ஆகியோருடனும் அருள்பாலித்து வருகிறார். சிறப்பு பெற்ற இக்கோவிலில், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு காலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், உற்சவர் அலங்காரமும் நடைபெற்றது. பின்னர் காலை 10.01 மணிக்கு சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்தார். அப்போது மகாதீபாரதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு எள்தீபம் ஏற்றியும், அர்ச்சணையும் செய்து வழிபட்டனர். அதே போல் ரிஷபம், மிதுனம், கன்னி, சிம்மம், விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்து அர்ச்சனை செய்தனர்.
விளங்குளம்: இதை போல தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 25 கி.மீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரைசாலையில் அமைந்துள்ளது விளங்குளம் கிராமத்தில், சனீஸ்வரர் ஆதிபிருஹத் சனீஸ்வரராக, மங்கள சனீஸ்வர பகவானாக இங்கே காட்சி தந்து, அருள்பாலிக்கிறார். இங்கும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.