பதிவு செய்த நாள்
19
டிச
2017
03:12
ஈரோடு: கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில், வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து உற்சவத்துடன் இன்று தொடங்குகிறது. ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, ஆண்டு தோறும் விமர்சையாக நடக்கிறது. வரும், 29ல் நடக்கிறது. அதிகாலை, 5:00 மணிக்கு, சொர்க்க வாசல் வழியாக, கஸ்தூரி அரங்கநாதர் சேவை சாதிக்கிறார். இந்நிலையில் விழா தொடக்க நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக, பகல் பத்து உற்சவம் இன்று தொடங்குகிறது. வரும், 28 வரை, திருவரங்கன் அடிகளார், பட்டாச்சாரியார்கள், நாலாயிரம் திவ்ய பாடல்கள், திருமங்கையாழ்வாரின், திருநெடுநாடகம் பாசுரங்களை பாடுவார்கள். சொர்க்கவாசல் திறப்பு உற்சவத்திற்குப் பின், ராப்பத்து உற்வசம் நடக்கிறது. இதில், நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரங்களை பாடுவார்கள். வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், விழா ஏற்பாடு தீவிரமாக நடக்கிறது. பரமபத வாசல் சுற்றுச்சுவர், சொர்க்கவாசல் கதவு வார்னிஸ் மற்றும் கதவு குமிழ்கள் பொன்னிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டு தயார் படுத்தப்பட்டுள்ளன.