பதிவு செய்த நாள்
16
டிச
2011
03:12
கிருஷ்ணாவதாரம் எடுத்து கீதையை உபதேசித்த பிறகும், உலகில் நடந்த அட்டூழியங்கள் குறையவில்லை. மாறாக, கலி பிறந்ததால், முன்பை விட கொடிய நிகழ்ச்சிகளே நடந்தன. பக்தி அறவே அற்றுப்போனது. நல்லவர்களால் வாழ முடியவில்லை. எனவே, திருமால் லட்சுமியிடம், நீ பூலோகம் சென்று கீதையின் அர்த்தத்தை மக்களுக்கு எளிமையாக எடுத்துரைத்து உலகைத் திருத்து, என்றார். மகாலட்சுமி மறுத்து விட்டாள். ராமாவதார காலத்தில் சீதையாக வந்து, உங்களுடன் பட்ட கஷ்டம் போதாதா? குறிப்பாக, என்னையே சந்தேகப்பட்டு பேசினீர்களே! இனியும் நான் செல்லமாட்டேன். கிருஷ்ணாவதாரத்தில் நான் ருக்மிணியாக உங்களுடன் வந்தேன். ஆனால், சத்யபாமா மூலம் அவஸ்தைப்பட்டேன். இனிமேல், வைகுண்டத்தை விட்டு நகர்வதாக இல்லை என்றாள்.இதனால், பூமாதேவியைத் திரும்பிப் பார்த்தார் பகவான். பார்வையிலேயே கட்டளையை ஏற்றாள் பூமாதேவி. பூலோகத்தில் பிறந்து கஷ்டப்படப் போகிறோம் எனத்தெரிந்தும், உலக மக்களைப்பாதுகாக்க, ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள நந்தவனத்தில், பெரியாழ்வாரின் திருக்குமாரத்தியாக அவதரித்தாள்.
குழந்தைகள் மனதில் பதியும் விஷயம்
பெரியவர்கள் எப்படி நடந்து கொள்கிறோமோ, அது அப்படியே பிஞ்சுக்குழந்தைகளின் மனதில் பதிந்து விடும். ஒரு தந்தை, தன் பிள்ளையிடம் காசு கொடுத்து புகை வாங்கி வர அனுப்பினால், அதைப் புகைக்கும் எண்ணம் பிள்ளைக்கும் வந்து விடும். ஆனால், அவர் அதிகாலை ஆறு மணிக்கே எழுந்து, நீராடி, இறைவனை வணங்கி, அலுவலகத்துக்கு கிளம்பினால் பிள்ளையும் அப்படியே செய்யும். ஆனால்,இதை 60 வயது தகப்பனான பிறகு செய்து பயனில்லை. இளமை முதலே இவருக்கும் இந்தப் பழக்கம் இருக்க வேண்டும். ஆண்டாளுக்கும் இளமையிலேயே பெருமாளைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற வைராக்கியம் மனதில் ஏற்பட்டது. காரணம், அவளது தந்தை பெரியாழ்வார் கிருஷ்ணனின் திவ்ய லீலைகளை அவளுக்கு எடுத்துரைப்பார். ருக்மணி கல்யாணம் பற்றி சொல்வார். இதையெல்லாம் கேட்ட குழந்தை, அவன் மீதே பித்தானது. அவனையே திருமணம் செய்து தன் உறுதிப்பாட்டை நிலை நிறுத்தினாள்.
அவள் சூடிய இரட்டைமாலை
ஆண்டாள் வெறும் பூ மாலையை மட்டும் சூடி, பெருமாளுக்கு அனுப்பினாளா என்றால் இல்லை. அவள் பாமாலையும் தொடுத்தவள். பாமாலையை அவன் மனதில் நிற்கும்படியும், பூமாலையை திருவடியிலும் சமர்ப்பித்தாள். சின்ன வயதிலேயே பெரும் பக்தி அவளிடம் இருந்தது. இதைத் தான் வரவர முனிகள் பிஞ்சாய் பழுத்தாளை ஆண்டாளை என்று புகழ்கிறார். பிஞ்சில் பழுத்தால் உவர்க்கும் என்பர். ஆனால், இவளோ பக்தியில் பழுத்ததால், இவளது பாடல்தேனாய் இனிக்கின்றது.
ரங்கனும் திருமலையானும்
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ரங்கநாதனைப் பாடி வந்தார். ஒருநாள் திருவேங்கடமலையில் எழுந்தருளியுள்ள வெங்கடாஜலபதி, என்னையும் பாடக்கூடாதா? என்று கேட்டார். அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடமாட்டேன் என்று மறுத்து விட்டார். அவர் ஏழுமலையானை குரங்கன் என்று சொன்னதற்கு காரணம் உண்டு. நாலாயிர திவ்ய பிரபந்த பாடல் ஒன்றில், மந்திபாய் வட வேங்கட மாமலை என திருமலையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். அங்கே மந்திகள் அதிகம். மந்திக்குரங்குகள் வசிக்கும் மலையில் இருப்பதால் அவரைக் குரங்கன் என்றார். மறுநாள் ஸ்ரீரங்கத்தில் சுப்ரபாதம் முடிந்து திரையை விலக்கினர். படுத்திருந்த ரங்கநாதனுக்கு பதிலாக ஏழுமலையான் நின்றார். ஐயங்கார் அதிர்ந்து விட்டார். அன்றுமுதல் ஏழுமலையானையும் பாட ஆரம்பித்தார். திருமலை தெய்வமும் ஸ்ரீரங்கநாதரும் ஒன்றே என்பதை நிரூபிக்கவே இந்த நாடகத்தை நிகழ்த்தினார் பெருமாள்.
பழி தீர்ப்பதிலும் இனிமை
பழி தீர்ப்பது நல்ல செயலா என்றால் இல்லவே இல்லை என்போம். ஆனால், பகவானையே பழி தீர்த்திருக்கிறாள் ஆண்டாள். விருந்து இலையில் கூட பர்பியையும் வைத்து பாகற்காயையும் பக்கத்திலே வைக்கிறார்கள். இனிக்கிறதே என சிறிது சுவைத்தால், அடுத்து கசக்கிறது வாழ்க்கை. துன்பம் அதிகமாகி விட்டால், ஏன் படைத்தாய் இறைவா! என்று புலம்புகிறோம். ஆனால், ஆண்டாள் இறைவனை செயல்படவே விடவில்லை. ஒரு மாலையை எடுத்தாள், கழுத்தில் போட்டாள். அவனுக்கே அனுப்பி வைத்தாள். அந்த மாலையைக் கட்டியிருந்த பக்தி என்னும் நாரால், அவனையே கட்டிப் போட்டாள். ஏ கிருஷ்ணா! மனிதனாய் பிறந்த எல்லாரையும் கட்டிப் போடலாம் என கனவு காணாதே. நாங்கள் பக்தி என்னும் கயிறால் உன்னைக் கட்டிப் போட்டு விடுவோம். ஏற்கனவே, எங்கள் யசோதை உன்னை உரலில் கட்டிப் போட்ட முன்னுதாரணம் எங்களிடம் இருக்கிறது, என்று தானே சொல்லாமல் சொல்லியிருக்கிறாள். ஆண்டாள் தொடுத்த அந்த பாமாலையே திருப்பாவை. இதை மார்கழியில் பக்தியுடன் பாடி, அந்த மாயவனைக் கட்டிப் போடலாம். சம்சாரக்கட்டில் நம்மைக் கட்டிய அவனை பழிக்குப்பழி வாங்கலாம். பழி வாங்குவதிலும் கூட எவ்வளவு இனிமை பாருங்கள்!
தயிர் கடைந்தால் வீட்டிற்கு நல்லது
அக்காலத்தில், மகரிஷிகள் ஹோமத்திற்கான நெருப்பு பற்ற வைக்க, அரணிக்கட்டையைக் கடைவார்கள். அவ்வாறு அவர்கள் ஒரு சமயம் செய்து கொண்டிருந்த வேளையில், அவ்வழியே ராமபிரான் சீதையோடு சென்று கொண்டிருந்தார். ராமபிரானின் பேரழகைக் கண்ட ரிஷிகள் மயங்கி நின்றனர். பெண்ணாய் பிறந்திருந்தால், அவரைத் திருமணம் செய்திருக்கலாமே என எண்ணினர். அந்த மகரிஷிகளை தன்னோடு சேர்த்துக் கொள்ள விரும்பிய ராமபிரான், அதையடுத்த கிருஷ்ணாவதாரத்தில் ஆயர்பாடியில் அந்த ரிஷிகளை கோபியராக பிறக்கச் செய்தார். முன்ஜென்ம வாசனை யாரையும் விடாதல்லவா? காலையில் எழுந்ததும் ஹோம அக்னிக்காக அரணிக்கட்டையைக் கடைந்தது போல, ஆயர்பாடியில் பெண்ணாகப் பிறந்த ரிஷிகள் தயிரை கடையத் தொடங்கினர். பகவானே பாலகிருஷ்ணராக ஆயர்பாடியில் நேரில் வந்து வெண்ணெய், நெய்யை தானே நேரடியாக எடுத்துக்கொண்டார். ஆண்டாளும் பாவைப்பாடலில் பெண்கள் தயிர் கடையும் ஒலியின் மகத்துவத்தை போற்றுகிறாள். தயிர் கடையும் சத்தம் எழுந்தால் வீட்டில் மங்கலம் உண்டாகும். வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ? என்று கடையும் மத்தின் ஒலியைப் பாடுகிறது பாவை பாசுரம்.