பதிவு செய்த நாள்
20
டிச
2017
12:12
திருப்பூர்: சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, திருப்பூர் கோவில்களில், சிறப்பு யாக பூஜைகள் நேற்று நடந்தது; இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். நவகிரகங்களில் ஒருவரான சனீஸ்வர பகவான், விருச்சிக ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு நேற்று பெயர்ச்சியானார். இதை முன்னிட்டு, கோவில்களில் நேற்று சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானுக்கு, நேற்று காலை, பல்வேறு மூலிகை பொருட்களுடன், வேத மந்திரங்கள் முழங்க, யாக பூஜைகள் நடந்தன. பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம் என, பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. வெள்ளி காப்பு அலங்காரத்தில், சனீஸ்வர பகவான் எழுந்தருளினார். இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, எள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, சபா மண்டபத்தில், சிறப்பு யாகம் நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க, பல்வேறு மூலிகை பொருட்களால் யாக பூஜைகள் செய்யப்பட்டு, திருக்குட ஊர்வலம் நடந்தது. பலன் பெறும் ராசிகள், பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளுக்கு அர்ச்சனை மற்றும் வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.ண திருப்பூர், கே.செட்டிபாளையம், உண்ணாமுலை அம்பிகை உடனமர் அண்ணாமலை ஈஸ்வரர் கோவிலில், சனிப்பெயர்ச்சி யாக பூஜைகள், நேற்று நடந்தது. சனிபகவானுக்கு, 16 திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சாமாளாபுரம், தில்லை நாயகி உடனமர் சோழீஸ்வர சுவாமி கோவிலில், தனிச்சன்னதியில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரபகவானுக்கு, காலை 7:00 மணிக்கு, சிறப்பு யாக பூஜை நடந்தது. அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, 10:01க்கு, மகா தீபாரானை நடந்தது. ஊத்துக்குளி ரோடு, மண்ணரை, செல்வரபுரம், ராஜகணபதி கோவில்; மண்ணரை, சத்யா நகர் சித்தி விநாயகர் கோவில், மண்ணரை பஸ் ஸ்டாப், செல்வ விநாயகர் கோவில்; சேவூர் வாலீஸ்வரர் கோவில்; திருப்பூர் காசி விஸ்வநாதர் கோவில்; ஜீவா காலனி மாகாளியம்மன் கோவில், சாமந்தங்கோட்டை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோவில் உள்ளிட்ட இடங்களிலும், சனிப்பெயர்ச்சியை ஒட்டி, சிறப்பு யாகம், அபிஷேக பூஜைகள் நடந்தன.