சிலர் பாம்பை வாய் வழியே விழுங்கி, மூக்கு வழியே எடுப்பர். இது சாதனைக்காக செய்யப்படுவது. ஆனால், பாம்பை விழுங்காமலேயே வயிற்றுக்குள் செல்ல வைக்க ஒரு வழி இருக்கிறது. இப்படியும் சாதிக்கலாமா என யாரும் பெருமைப்பட்டு கொள்ள வேண்டாம். ஒருமுறை நபிகள் நாயகம் வானுலகம் சென்ற போது, சிலர் கூட்டமாக கூடி நிற்க கண்டார். அவர்களது வயிறு கண்ணாடி போல காட்சியளித்தது. அதற்குள் ஏராளமான பாம்புகள் வளைந்து கொண்டிருந்தன. அங்கிருந்த வான தூதரிடம் அதற்கான காரணம் கேட்டார். “நாயகமே! அவர்கள் வட்டி வாங்கி வாழ்க்கை நடத்தியவர்கள்,” என்றார். வட்டி வாங்குபவர்கள் பூமியில் வாழும்போது வேண்டுமானால், சுக வாழ்வு வாழலாம். ஆனால் இறந்த பிறகு, வட்டி கட்டியவரின் வயிற்றெரிச்சல் பாம்புகளாய் மாறி, வயிற்றில் குடியேறி வசிக்கும் என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது.