நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலில் முக்கோடி தெப்பத் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2017 06:12
தஞ்சாவூர்: நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலில் முக்கோடி தெப்பத் திருவிழா கொடியேற்றதுடன் துவங்கியது. தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவிலில் வஞ்சுளவல்லி தாயார் உடனாய சீனிவாசபெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் 20வது திவ்யதேசமாகவும், சோழநாட்டு திருப்பதிகள் 40ல் 14வது திருப்பதியாகவும் போற்றப்படுகிறது.
இங்கு மூலவராகவும் உற்சவராகவும் விளங்கும் கல்கருடபகவான் ஆண்டிற்கு இரண்டு முறை மட்டும் உற்சவராக வீதியுலா வருவது பிரசித்திபெற்றது. முக்கோடி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு காலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பெருமாள் தாயார் சிறப்பு புஷ்பலங்காரத்தில் கொடிமரம் முன்பாக எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. பின் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் செய்யப்பட்டன. விழா நாட்களில் தினசரி காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் வீதியுலா நடக்கிறது.
நான்காம் நாள் விழாவான உலகபிரசித்திபெற்ற கருடசேவை நிகழ்ச்சி வருகிற 25ம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணியளவில் கருடபகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சன்னதியிலிருந்து முதலில் நான்குபேர், அடுத்து 8 பேர், 16 பேர், 32 பேர், 64 பேர் என கருடபகவானை சுமந்து கருடபகவான் வாகன மண்டபம் எழுந்தருளும் காட்சி பக்தர்கள் வெள்ளத்தில் கருடபகவான் நீந்தி வருவது போல் காட்சியளிப்பார் என்பதால் கருடசேவையின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலின் வெளிப்புறமும், உள்புறமும் காத்திருந்து தரிசனம் செய்வது சிறப்பு. 9ம் நாள் விழாவாக வருகிற 30ம் தேதி தெப்பத்திருவிழா நிகழ்ச்சி நடக்கிறது.