குற்றாலம் : குற்றாலத்திற்கு ஐயப்ப பக்தர்களின் வருகை குறைந்து காணப்பட்டது. முல்லை பெரியாறு அணை பிரச்னை காரணமாக கடந்த ஒருவார காலமாக தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு இயக்கப்பட்டு வந்த வாகனங்கள் செல்ல முடியாதவாறு தமிழக கேரள எல்லையில் உள்ள 13 வழிப்பாதைகள் அடைக்கப்பட்டு விட்டன. இதனால் போக்குவரத்து தடைபட்டது. மேலும் தமிழக கேரள எல்லை பகுதிகளில் பதட்டம் நிலவி வருகிறது. செங்கோட்டை புளியரை வழியாக மட்டுமே வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் ஐயப்ப பக்தர்கள் இவ்வழியாக சபரிமலை சென்று வந்து கொண்டிருக்கின்றனர். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களும், தரிசித்து திரும்பி வரும் பக்தர்களும் வாடிக்கையாக குற்றாலம் வந்து குளித்து செல்வர். தற்போது செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல்வேறு கட்சியை சேர்ந்த போராட்டக் குழுவினர் வரும் 19ம் தேதி செங்கோட்டை வழியாக கேரளா செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்துவோம் என முடிவு செய்யப்பட்டுள்ளதால் குற்றாலத்திற்கு ஐயப்ப பக்தர்களின் வருகை மிகவும் குறைந்து காணப்படுகிறது.