பதிவு செய்த நாள்
28
டிச
2017
02:12
கோவை : வைகுண்ட ஏகாதசி விழா, நாளை (டிச., 29ம் தேதி) அனைத்து வைணவக் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சொர்க்கவாசலும் திறக்கப்படுகிறது. மார்கழி மாதம் மூன்றாம் நாள், (கடந்த 18ம் தேதி) முதல் பகல் பத்து உற்சவம் துவங்கியது. இன்று நிறைவடைகிறது. இந்நிலையில் நாளை முதல், ராப்பத்து உற்சவம் நடைபெறும். இந்நாளில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. மாதந்தோறும் கடை பிடிக்கப்படும் ஏகாதசியில் உபவாசமிருந்து, பெருமாளை பக்தர்கள் வணங்குவர்.
மார்கழி மாதம் வரும் ஏகாதசி வைகுண்டத்தில் பின்பற்றப்படும் ஏகாதசி. அதனால் பூலோகத்தில் அன்று ஒரு நாளைக்கு மட்டும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதன் வழியே பக்தர்கள் கடந்தால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். அதனால் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. காரமடை அரங்கநாதர் கோவிலில், நாளை காலை 5:45க்கும், கோவை ராம்நகர் கோதண்டராமசாமி தேவஸ்தானத்தில், காலை 5:00 மணிக்கும், உக்கடம் நரசிம்ம பெருமாள் கோவில், சலீவன் வீதி வேணுகோபாலசுவாமி கோவில், பெரிய கடைவீதி லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவில், ராமநாதபுரம், நரசிங்கபெருமாள் கோவிலில், காலை 5:20 மணிக்கும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
பாப்பநாயக்கன் பாளையம் சீனிவாசபெருமாள் கோவில், சித்தாபுதுார் ஜெகன்நாதபெருமாள் கோவில், கவுண்டம்பாளையம். கோவை திருப்பதி, சென்னனுார் கரிவரதராஜ பெருமாள் கோவில், ராதாகிருஷ்ணன் கோவில்களில், சொர்க்கவாசல் திறப்பும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவும் நடக்கிறது. மருதமலை முருகன் கோவிலில் அமைந்துள்ள கரிவரதராஜபெருமாள், பேரூர் பட்டீசுவரர் கோவிலிலுள்ள, வரதராஜபெருமாள் சன்னிதிகளில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.