பதிவு செய்த நாள்
28
டிச
2017
02:12
காரமடை : காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, நாளை சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் மிகவும் பழமையான வைணவ தலம் காரமடை அரங்கநாதர் னாகோவில். இங்கு அரங்கநாத பெருமாள் சுயம்பு வடிவில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கடந்த, 19ல் திருமொழித் திருநாள் எனும் பகல் பத்து உற்சவம் துவங்கியது. கோவில் ஸ்தலத்தார் நல்லான் சக்கரவர்த்தி, வேதவியாச பட்டர் சுவாமிகள் ஆகியோர் சுவாமி முன் பாசுரங்களையும், திருமொழி பாசுரங்களையும் சேவித்து வருகின்றனர். இன்று இரவு, 8:00 மணிக்கு பெருமாள் மோகினி அவதாரத்தில், நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நாளை (29ம் தேதி) அதிகாலை, 5:45 மணிக்கு வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், ராமானுஜர் ஆகிய மூவரும் சொர்க்க வாசல் முன், அரங்கநாத பெருமாளை எதிர்கொண்டு வழிபட, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரங்கநாதப்பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
இதைத்தொடர்ந்து, நாளை இரவு திருவாய் மொழித் திருநாள் எனும் ராப்பத்து உற்சவம் துவங்குகிறது. ஜன., 5ம் தேதி குதிரை வாகனத்தில் அரங்கநாத பெருமாள் உற்சவம் நடக்கிறது. 7ம் தேதி விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கைலாஷ் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
பெரியநாயக்கன் பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், துடியலுார் வட்டாரங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் நாளை காலை, 5:00 மணிக்கு வைகுண்ட ஏகாதசி விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் ரோட்டில் உள்ள அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நாளை காலை, 5:00 மணிக்கு வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அருள்மிகு கரிவரதராஜ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் சொர்க்கவாசலில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. பக்தர்கள் சிரமமின்றி சுவாமியை தரிசிக்க, சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதே போல சின்னத் தடாகம், நாயக்கன்பாளையம், திருமலைநாயக்கன்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள, கரிவரதராஜ பெருமாள் கோவில்கள், பாலமலை அரங்கநாதர் கோவில், இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில், காளிபாளையம் அருகே உள்ள கோமாளிரங்கன் கோவில், நாயக்கனுார் லட்சுமி நரசிம்மர் கோவில், பாப்பநாயக்கன்பாளையம் நவநரசிம்மர் கோவில், பன்னீர்மடை கிருஷ்ணசாமி கோவில், கோவனுார் பெருமாள் கோவில், தொப்பம்பட்டி பெருமாள் கோவில், சாமினாசெட்டிபாளையம் வெங்கட்டராமர் மற்றும் கள்ளழகர் பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு நாளை அதிகாலை சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.