பதிவு செய்த நாள்
02
ஜன
2018
12:01
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, புத்தாண்டு சிறப்பு தரிசனத்தில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், ஆறு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திருத்தணி முருகன் மலைக் கோவிலில், நேற்று முன்தினம், நள்ளிரவு, 12:01 மூலவருக்கு, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.அதிகாலை, 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் நடந்தது,தொடர்ந்து, மூலவருக்கு தங்க கீரிடம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, வெள்ளி நாக வாகனத்தில், உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆங்கில புத்தாண்டையொட்டி, மலைக்கோவிலில், அதிகாலை, 3:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, ஒன்றரை லட்சம் பக்தர்கள் பொது வழியில் ஆறு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசனம் செய்தனர். இதில், மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, எஸ்.பி., சிபி சக்கரவர்த்தி, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, ஆர்.டி.ஓ., ஜெயராமன், தாசில்தார் நரசிம்மன் உட்பட அரசியல் முக்கிய பிரமுகர்கள் மூலவரை தரிசித்தனர்.திருத்தணி டி.எஸ்.பி., பாலசந்திரன் தலைமையில், 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் கெடுபிடி: முருகன் மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்லும் வழியில் ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணித்தனர். மலைக்கோவிலில் வேலை செய்யும் கோவில் ஊழியர்கள், மற்றும் கோவில் தக்கார் ஆகியோர் வாகனங்களுக்கு நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி முதல், நேற்று அதிகாலை, 5:00 மணி வரை அனுமதிக்கப்படவில்லை.
கூடுதல் விலையில் டிக்கெட்கள்: முருகன் மலைக்கோவிலில், புத்தாண்டு தரிசனம் என்பதால், 150 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டை, 200 ரூபாயாகவும் 100 ரூபாய் டிக்கெட், 150 ரூபாய் என, அதிகரித்து பக்தர்களிடம் கோவில் நிர்வாகம் வசூலித்தனர். ஆளும் கட்சியினர் மற்றும் அவரை அழைத்து வந்தவர்களை மட்டும் கோவில் ஊழியர்கள் டிக்கெட் பெறாமல், சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.