திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் சாமி தரிசனம் செய்தனர். அதிகாலையில் நடை திறக்கும் முன் பக்தர்கள் கோயில் முன்பாக வரிசையில்காத்திருந்தனர். அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து தலைமைக் குருக்கள் பிச்சை சிவாச்சார்யார் தலைமையில் திருவனந்தால், திருப்பள்ளிஎழுச்சி உள்ளிட்ட பூர்வாங்க பூஜை நடந்தது. கோயில் அறங்காவலர்கள் கோனாப்பட்டு எஸ்.பி.அருணாசலம், அரிமளம் என்.சிதம்பரம் பங்கேற்றனர். தொடர்ந்து மூலவர் விநாயகர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூலவர் சன்னதிக்கு முன்பாக வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்ஸவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பிள்ளையார்பட்டியில் சாமி தரிசனம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.